கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்காக ₹2,500 லஞ்சம் வாங்கிய முதுநிலை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

விவரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த கரீம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்தவர் உதவான் ஷெரீப். இவர் தனது நிலத்தின் பட்டாவை மாற்றம் செய்வதற்காக கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அங்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராகப் பணியாற்றி வரும் ஆரோன் என்பவர், உதவான் ஷெரீப்பின் பட்டா மாற்ற விண்ணப்பத்தை அடுத்தகட்டத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றால் தனக்கு ₹2,500 லஞ்சம் தர வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத உதவான் ஷெரீப், இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் விரித்த வலை:
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின்படி, இன்று (10-07-2026) ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த முதுநிலை உதவியாளர் ஆரோனிடம் உதவான் ஷெரீப் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார், ஆரோனை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முதுநிலை உதவியாளர் ஆரோனிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே வைத்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிரடி கைது நடவடிக்கை அரசு அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
