Homeசெய்திகள்இந்தியாடிஜிட்டல் தாகம்’: ஒரே நாளில் 1.9 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் ‘AI’ தொழில்நுட்பம் -...

டிஜிட்டல் தாகம்’: ஒரே நாளில் 1.9 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் ‘AI’ தொழில்நுட்பம் – இந்தியாவில் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

-

- Advertisement -

மொபைல் மற்றும் கணினிகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால், இந்தியாவில் கடுமையான நன்னீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

AI

we-r-hiring

ஏஐ டேட்டா சென்டர்களின் அசுரத் தாகம்:
நாம் கேட்கும் கேள்விகளுக்கு நொடிப் பொழுதில் பதிலளிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான கணினித் தொகுப்புகள் (Servers) வேலை செய்கின்றன. இவை தொடர்ந்து இயங்கும்போது வெளியிடும் மிகக் கடுமையான வெப்பத்தைத் தணிக்க, பிரம்மாண்ட ‘கூலிங் டவர்கள்’ (Cooling Towers) மூலம் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு பெரிய (100 MW Hyperscale) ஏஐ டேட்டா சென்டர், தனது கணினிகளைக் குளிர்விக்க ஒரே நாளில் சுமார் 19 லட்சம் முதல் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது. இதே வேகத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏஐ மையங்கள் அமைக்கப்பட்டால், ஒட்டுமொத்தமாக தினமும் 1.9 கோடி லிட்டருக்கும் அதிகமான நன்னீர் இந்த இயந்திரங்களால் மட்டுமே உறிஞ்சப்படும் சூழல் ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குடிநீரைப் பயன்படுத்தும் கட்டாயம்:
“இந்தத் தேவைக்கு ஏன் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்தக் கூடாது?” என்ற கேள்வி எழும் நிலையில், அந்த நீரில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெப்பப் பரிமாற்றி இயந்திரங்கள் (Heat Exchangers) பழுதாகிவிடும் என்பதால், இந்நிறுவனங்கள் மனிதர்கள் குடிக்கும் தூய்மையான நன்னீரையே முழுமையாகப் பயன்படுத்துகின்றன. மேலும், இதில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 80 சதவீத நீர் ஆவியாகி காற்றில் கலந்துவிடுவதால், தொடர்ந்து புதிய நன்னீர் தேவைப்படுகிறது.

​அச்சுறுத்தலில் நிலத்தடி நீர் ஆதாரம்:
இந்தியாவின் ஒட்டுமொத்த டேட்டா சென்டர்களில் சுமார் 65 சதவீதம் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முன்னணி பெருநகரங்களில்தான் அமைந்துள்ளன. ஏற்கனவே கோடைகாலங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் இந்த நகரங்களில், ஏஐ மையங்களின் வருகை நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே உத்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளில் டேட்டா சென்டர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில், விவசாயக் கிணறுகள் வறண்டு போயுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மேலும், வறட்சி காலங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையின் போது, இந்த டேட்டா சென்டர்கள் ‘அத்தியாவசியச் சேவைகள்’ பட்டியலின் கீழ் வருவதால், அரசு இவற்றுக்குத் தடையற்ற நீர் விநியோகத்தை வழங்க வேண்டியிருக்கும். இதனால், மக்களின் அடிப்படை குடிநீர் தேவையை விட ஏஐ இயந்திரங்களுக்கே முன்னுரிமை தரப்படும் பேராபத்து உள்ளது.

ஐநா சபையின் அதிர்ச்சித் தகவல்:
நாம் ஏஐ சாட்பாட்களிடம் கேட்கும் ஒரு சாதாரண 100 வார்த்தைகள் கொண்ட கேள்விக்கு, அந்த சிஸ்டத்தைக் குளிர்விக்க அரை லிட்டர் தண்ணீர் வரை செலவாகிறது. ஐநா சபை (UN) எச்சரிக்கையின்படி, வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய ஏஐ டேட்டா சென்டர்களின் ஓராண்டுத் தண்ணீர் தேவை மட்டும் சுமார் 9.3 லட்சம் கோடி லிட்டராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 130 கோடி மக்களின் ஓராண்டு குடிநீர் தேவைக்குச் சமமாகும்.

இந்தியாவில் 2025-ல் 1,500 மெகாவாட்டாக இருந்த டேட்டா சென்டர் திறன், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 8,000 முதல் 10,000 மெகாவாட்டாக உயரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தீர்வைக் காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

​தீர்வு என்ன?
தொழில்நுட்பப் புரட்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை தாரை வார்ப்பதைத் தவிர்க்க, டேட்டா சென்டர்களில் நன்னீருக்குப் பதிலாக கடல்நீரைப் பயன்படுத்துவது அல்லது ‘மூடிய சுழற்சி திரவக் குளிர்விப்பு’ (Closed-loop liquid cooling) போன்ற மாற்று முறைகளை அமல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் (EIA) கீழ் கடுமையான சட்டங்களையும், நீர் தணிக்கை விதிகளையும் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

MUST READ