தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், வரும் டிசம்பர் மாத வாக்கில் தான் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த தீவிர அரசு எதிர்ப்பு மற்றும் மாணவப் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிற்கு (Reuters) அளித்துள்ள தொலைபேசி பேட்டியில் இத்தகவலைப் பகிர்ந்துள்ளார். அவாமி லீக் கட்சியின் தலைவரான 78 வயது ஷேக் ஹசீனா, தன்னுடன் தஞ்சம் புகுந்துள்ள கட்சியின் பிற முக்கியத் தலைவர்களுடன் இணைந்து டிசம்பரில் வங்கதேசம் திரும்பவுள்ளதாகவும், அங்கு சென்றதும் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடையப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் தாய்நாடு திரும்பும்போது அவர்கள் என்னைக் கைது செய்யலாம், அல்லது கொல்லவும் செய்யலாம். எது நடந்தாலும் நான் அங்கு சென்றே தீருவேன். எனது கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அங்கு கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். எனக்கு மரணம் வருவதாக இருந்தால், அது என் பெற்றோரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட, அவர்களின் இரத்தம் சிந்திய என் சொந்த மண்ணிலேயே நிகழட்டும்.” என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். 2024 போராட்டங்களின் போது பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற குற்றங்களுக்காக, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், அங்குள்ள சட்ட நடவடிக்கைகள் மூலமாக இந்த சதிவலைகள் அனைத்தும் விரைவில் அம்பலமாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதைய டாக்கா அதிகாரிகளுடன் தனது தாயகம் திரும்புதல் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள ஹசீனாவின் இந்த அதிரடி முடிவு, வங்கதேச அரசியலில் மீண்டும் பெரும் பதற்றத்தையும் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
