“அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. அதிலும் குறிப்பாக, சொந்த பலம் இல்லாமல் ஊரான் பலத்தில் ஆட்சிக்கு வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது” என திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.


கரூரில் அண்மையில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுக்கான அரசுப் பணி ஆணைகளை முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கினார். அந்தப் பாராட்டு விழாவில், திமுக மற்றும் அதன் தலைவர்களை நோக்கி விஜய் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலடியாகத் துரைமுருகனின் இந்த அட்வைஸ் மற்றும் கண்டனம் அமைந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் கரூரில் பேசியது என்ன?
கரூரில் பயனாளிகளுக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்கிப் பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த கால திமுக ஆட்சியையும் அதன் தலைவர்களையும் ‘சரமாரி’யாகத் சாடியிருந்தார். அவரது பேச்சின் முக்கிய விவரங்கள்:
காவல்துறை மீது குற்றச்சாட்டு: “என் வாழ்வில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு ஆழமான வடு. அன்று கூட்டம் அதிகமாக இருந்தபோது காவல்துறை என்னை நாமக்கல்லிலேயே தடுத்திருக்கலாம்.
ஆனால், அவர்கள் கரூர் வரை என்னை வரவழைத்து நாடகம் ஆடி ஏமாற்றிவிட்டார்கள். விபத்து நடந்தபோது நான் ஓடி ஒளிந்து கொண்டதாக திமுகவினர் பழிசுமத்துகின்றனர். ஆனால், இங்குள்ள ‘கரூர் கம்பெனி ஓனர்’ (செந்தில் பாலாஜி) எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். மற்றொருவர் சிங்கப்பூருக்குச் சென்று செக்-அப் என்ற பெயரில் ஒளிந்து கொண்டார்.”
திமுக ஒரு வெண்டிங் மெஷின்: “கடந்த திமுக ஆட்சி என்பது ஊழலின் வெண்டிங் மெஷின் போலச் செயல்பட்டது. ஒரு ஆயா வேலைக்குச் சேர வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் கட்டிங், கரப்ஷன், கமிஷன் ஆகிய மூன்றும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.”
”வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல!” – துரைமுருகன் அதிரடிப் பதில்
முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனங்களுக்குத் திமுக சார்பில் மிகக் கடுமையான எதிர்வினையாற்றியுள்ள துரைமுருகன், அரசியல் நாகரிகம் குறித்து விஜய்க்குப் பாடம் எடுத்துள்ளார்:
பேச்சில் கண்ணியம் தேவை:
“அரசியல் பேச்சிலே முதலில் கண்ணியம் வேண்டும். தங்களுக்கு முன் இருந்த முதலமைச்சர்கள் எல்லாம் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து எப்படிப் பேசினார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதை விடுத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது முறையல்ல. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பெரிய வீரர்கள் ஆகிவிட முடியாது.”
வரலாற்றை மறக்கக் கூடாது:
“இந்த தற்காலிக வெற்றி நிலையானதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எங்களை விட்டால் நாட்டில் வேறு ஆளே இல்லை என்று காங்கிரஸ் இறுமாப்புடன் சொன்னது; அது என்ன ஆனது? அதிமுகவும் அப்படித்தான் மார்தட்டியது; இப்போது எங்கே போனது? அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். இரண்டையும் சமமாகப் பாவித்து மக்களின் மனதை வெல்பவர்தான் உண்மையான அரசியல்வாதி.”
சொந்த பலம் கிடையாது:
“ஏதோ ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதற்காக இவ்வளவு கர்வம் கொள்ளக் கூடாது. இந்த ஆட்சி ஒன்றும் விஜய்யின் சொந்த பலத்தால் வந்தது கிடையாது. கூட்டணிக் கட்சிகள் என்ற ‘ஊரான் பலத்தில்’ வந்தவருக்கு இவ்வளவு அகம்பாவம் ஆகாது” என்று துரைமுருகன் மிகத் காட்டமாகத் தாக்கியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் ‘கமிஷன், கரப்ஷன்’ புகார்களும், அதற்குத் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் அளித்துள்ள ‘ஊரான் பலம்’ என்ற பதிலடியும் தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது
