தமிழக அரசியல் களம் எப்போதும் உணர்ச்சிப்பூர்வமான திராவிட அரசியலையும், பிராந்திய அடையாளங்களையும் மையமாகக் கொண்டே சுழன்று வந்திருக்கிறது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய தற்போதைய சூழல், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது.


இங்கு திமுக என்ன நினைக்கிறதோ, அதிமுக என்ன திட்டமிடுகிறது, அல்லது புதிதாக களம் கண்ட தவெக என்ன எதிர்பார்க்கிறது என்பது முக்கியமல்ல; தமிழகத்தின் நிகழ்காலமும் எதிர்காலமும் இப்போது டெல்லியின் அதிகார மையமான பாஜகவின் கைகளில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிசர்சனம். இதற்கு மேல் பாஜக என்ன நினைக்கிறதோ, அதுதான் தமிழகத்தின் அரசியல் திசைவழி.
கடந்த தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்பது பாஜகவின் தற்காலிக இலக்கு மட்டுமே. அவர்களின் முதன்மை நோக்கம், திமுக கட்டமைத்த “ஒன்றிய அரசு எதிர்ப்பு” என்ற சித்தாந்த அரசியலை தமிழக மண்ணில் இருந்து வேரறுப்பதுதான். இந்தி திணிப்பு எதிர்ப்பு, தொகுதி மறுவரையறைக்கு எதிரான குரல், பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வருக்கா அல்லது ஆளுநருக்கா என்ற அதிகாரப் போட்டி எனத் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக முன்னெடுத்த அரசியல் யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக வியூகம் வகுத்தது. இந்த சித்தாந்தப் போரை எதிர்கொள்ள நேரடியாக களம் இறங்கினால் எடுபடாது என்பதை உணர்ந்த பாஜகவிற்கு, சரியான நேரத்தில் கிடைத்த துருப்புச் சீட்டுதான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.
திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக – பாஜக கூட்டணியால் மட்டும் சாத்தியமில்லை என்பது உலகறிந்த ரகசியம். அப்படியே எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவை முன்னிறுத்தி திமுகவை வீழ்த்தினாலும், மீண்டும் அதிமுகவே தமிழகத்தில் வலுவடையும். இதனால் திமுக – அதிமுக என்ற இருமுனைப் போட்டி அப்படியே தொடருமே தவிர, பாஜகவிற்கு இடமிருக்காது. எனவேதான், “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்ற வேட்டைக்காரனின் விதியைப் போல, அரசியல் அரிச்சுவடி கூட முழுமையாக அறியாத தவெகவை வைத்து, திமுகவை தேர்தல் களத்தில் வீழ்த்தும் முதற்கட்டத் திட்டம் அரங்கேற்றப்பட்டது.
இதன் உச்சகட்டமாக, திமுகவின் அசைக்க முடியாத ஆளுமையான தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையே கொளத்தூர் தொகுதியில் தேர்தல் களத்தில் வீழ்த்தி, திமுகவின் கோட்டையைச் சரித்துவிட்டது தவெக. இதற்கிடையில், திமுக கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகளை தவெக பக்கம் பக்குவமாகத் திசைதிருப்பி, திமுகவை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தும் பாஜகவின் தந்திரமும் கச்சிதமாக வேலை செய்தது.
பாஜகவின் இரண்டாவது மற்றும் மிக முக்கியமான இலக்கு – அதிமுக என்ற பேரியக்கத்தை தமிழக தேர்தல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்துவது. தற்போது திரைக்குப் பின்னால் நடப்பது இதுதான். அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் என முக்கிய முகங்களை ஒவ்வொன்றாக தவெக பக்கமும், அண்ணாமலை தொடங்கவிருக்கும் புதிய அரசியல் பாதையை நோக்கியும் நகர்த்தும் வேலைகள் தொடங்கிவிட்டன. அதிமுகவின் வாக்கு வங்கியையும், நிர்வாகக் கட்டமைப்பபையும் முழுமையாகச் சிதைத்து, அந்த இடத்தை தவெக மற்றும் பாஜகவின் கூட்டணி நிரப்புவதே இதன் பின்னணியில் உள்ள மாஸ்டர் பிளான் ஆகும்.
இதன் தொடர்ச்சியாக, பாஜகவின் அடுத்த கட்டத் திட்டத்தின்படி அண்ணாமலையின் ‘We The Leaders’ இயக்கம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இப்போதே 19 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துவிட்டதாகக் கட்டமைக்கப்படும் பிம்பம், 50 லட்சம் உறுப்பினர்களை எட்டியதும் புதிய கட்சியின் பெயராக அதிகாரப்பூர்வமாக உருவெடுக்கும். அப்போது அண்ணாமலை புதிய வேகத்துடன் விஸ்வரூபம் எடுப்பார், ஒட்டுமொத்த ஊடக வெளிச்சமும் அவர் பக்கம் திரும்பும். இதன் விளைவாக, தற்போதைய முதலமைச்சர் விஜய் – திமுக என்ற போட்டி மறைந்து, விஜய் – அண்ணாமலை என்கிற இருமுனைப் போட்டியாக களம் மாறும்.
2030-களை நெருங்கும்போது தமிழக அரசியல் களம் அண்ணாமலையா, விஜய்யா என்ற கடுமையான மோதலைச் சந்திக்கும். அப்போது, தற்போதைய முதலமைச்சர் விஜய் மீது திமுக முன்வைத்த புகார்கள் ஒவ்வொன்றாக விசுவரூபம் எடுக்கும். குறிப்பாக, கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடையும். இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் இப்போதைய விஜய் ரசிகர்களுக்கு அரசியல் ரீதியான முதிர்ச்சி வந்துவிடும். விஜய்யின் அரசியல் தெளிவின்மையைக் கண்டு அவர்களே வெட்கப்பட்டு, அவரை விட்டு வெளியேறி அண்ணாமலையுடன் ஐக்கியமாவார்கள்.
சட்டச் சிக்கல்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களால் ஜெயலலிதா எதிர்கொண்டதைப் போன்ற இக்கட்டான சூழலை விஜய் எதிர்கொண்டு சிறைக்குச் செல்ல நேரிடலாம். இந்த அரசியல் நிலையைப் பயன்படுத்தி, 2031-ல் பாஜகவின் முழு ஆதரவோடு அண்ணாமலை தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்வார். இந்த அரியணை மாற்றத்திற்குப் பிறகு, தமிழக அரசியல் களம் அண்ணாமலை – உதயநிதி என்ற இரு இளம் தலைவர்களின் நேருக்கு நேர் மோதலாக மாறும்.
அண்ணாமலை தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியில் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அரசியல் அதிருப்திகளைப் பயன்படுத்தி, 2036-ல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அப்போது, இந்த இடைப்பட்ட பத்தாண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகளை சரிபடுத்தும் பொறுப்போடு திமுக மீண்டும் தன் பயணத்தைத் தொடரும். தமிழக அரசியல் என்பது வெறும் வாக்குப்பதிவு அல்ல, அது டெல்லி எழுதிக் கொடுத்த திரைக்கதையின்படி நகரும் ஒரு நீண்ட கால சதுரங்க விளையாட்டு என்பதை இந்த நகர்வுகள் உணர்த்துகின்றன.
