மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்தவொரு கட்டாய உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தின் போது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வாக்குறுதிப்படி மாதந்தோறும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்க அரசிடம் வலியுறுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், மீனவர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்துவது அல்லது நிர்ணயிப்பது என்பது முற்றிலும் அரசின் கொள்கை சார்ந்த முடிவு (Policy Decision) ஆகும். இதில் நீதிமன்றம் தலையிட்டு, குறிப்பிட்ட தொகையை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட இயலாது என்று கூறி மனுவை நிராகரித்தனர். இருப்பினும், மீனவர்களின் வாழ்வாதாரப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு (2027) மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, இந்த நிவாரணத் தொகை உயர்வு குறித்துத் தமிழக அரசு உரிய முறையில் பரிசீலனை செய்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளனர்.

