தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது.

நாமக்கல்லில் இன்று மாலை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இதுவரை 6 ரூபாய் 65 காசுகளாக இருந்த முட்டை விலை, தற்போது 6 ரூபாய் 70 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் முட்டை விலை ஒட்டுமொத்தமாக 20 காசுகள் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் முட்டையின் நுகர்வும், சந்தையில் அதன் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவின் பிற முட்டை உற்பத்தி மண்டலங்களிலும் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதோடு, கோழி வளர்ப்பிற்குத் தேவையான முக்கிய கோழித்தீவன மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தத் தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்திச் செலவு உயர்வு காரணமாகவே முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும், வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இந்த மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தற்போது தினசரி 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுபோக, தமிழக அரசின் சத்துணவுத் திட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
55 ஆண்டுகாலத் தமிழகக் கோழிப்பண்ணை வரலாற்றில் ஒரு முட்டையின் பண்ணை விலையே 6 ரூபாய் 70 காசுகளைத் தொட்டுள்ளதால், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டையின் விலை 7 ரூபாயைக் கடந்து விற்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தீவன விலை உயர்வால் தவித்து வந்த பண்ணையாளர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
