Homeசெய்திகள்கட்டுரைதிமுக - அதிமுக கூட்டணி அமையுமா? ராகுல் காந்திக்கு அனிதா ராதாகிருஷ்ணன் காட்டிய அதிரடி 'பிளான்...

திமுக – அதிமுக கூட்டணி அமையுமா? ராகுல் காந்திக்கு அனிதா ராதாகிருஷ்ணன் காட்டிய அதிரடி ‘பிளான் பி’! தமிழக அரசியலில் பரபரப்பு!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது ‘திராவிட இயக்கங்களின் எதிர்கால வியூகம் மற்றும் கூட்டணிக் கணக்குகள்’ தான். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைப் பிடித்துள்ள தற்போதைய அரசியல் சூழலில், திராவிட சித்தாந்தத்தை மீட்டெடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து எப்டிபி (FTP Tamil) ஊடகத்திற்கு திமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான திரு. சுப்பரத்னம் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியின் விவரங்கள் இதோ:

திமுக

we-r-hiring

அதிமுக – திமுக கூட்டணி அமையுமா? ராஜேந்திர பாலாஜி பேச்சுக்கு விளக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கோவம் வந்தால் இந்த ஆட்சி கலைந்துவிடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் பேசியிருந்தார். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த திமுக செய்தித் தொடர்பாளர் சுப்பரத்னம், “பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்த அண்ணன் ராஜேந்திர பாலாஜி அவர்கள், இன்றைய நிலையில் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் யார் என்பதை உணர்ந்து தீர்க்கமாகப் பேசியுள்ளார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு இயக்கங்களுக்கும் கொள்கை, கோட்பாடுகள் ஒன்றுதான். இரு கட்சிகளுக்குமே தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தான் தலைவர்கள். நமக்குள் இருக்கும் பிரிவினையைப் பயன்படுத்தி இடையில் வந்தவர்கள் (தவெக) நிலைபெற்றுவிடக் கூடாது. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றாகிவிடக் கூடாது என்பதில் திராவிட இயக்க உணர்வாளர்கள் சுதாரிப்புடன் உள்ளனர்.

காலம் கட்டளையிடுமானால், தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பேராபத்தில் இருந்து திராவிட சித்தாந்தத்தை மீட்டெடுக்க திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி ஒரே தத்துவத்தின் கீழ் இணைந்து செயல்படுகிறார்களோ, அதேபோல பெரியார், அண்ணாவை ஏற்றுக் கொண்ட நாங்களும் இணைந்து செயல்படத் தயார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எளிதில் கோபப்படுபவர் அல்ல; ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள், அவர் கோபப்பட்டால் அது சண்டமாருதமாக மாறும்” என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் துரோகம்; அனிதா ராதாகிருஷ்ணன் காட்டிய ‘பிளான் பி’!

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன” என்று பேசியுள்ளது குறித்துக் கேட்டபோது சுப்பரத்னம் காரசாரமாகப் பதிலளித்தார்:

“காங்கிரஸ் கட்சி இக்கட்டான காலகட்டங்களில் இருந்தபோதெல்லாம், ராகுல் காந்தியைத் தூக்கி நிறுத்தியவர் எங்கள் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கேட்ட இடங்களைக் கொடுத்து, ராஜ்யசபா சீட்டும் வழங்கி கௌரவித்தார். ஆனால், ராகுல் காந்தி இதற்கு ஒரு நன்றிகூடச் சொல்லாமல், நேரடியாகப் பனையூருக்குச் சென்று ஜோசப் விஜய்யின் கைகளைப் பிடித்துக் கொண்டு கதவைத் தட்டி தவெக கூட்டணிக்குள் தஞ்சமடைந்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, நேரடியாக நம்மை எதிர்க்கும் தவெக-விற்கு ராகுல் காந்தி ஆதரவு தருவது அப்பட்டமான துரோகம். அடிமட்டத் தொண்டர்களின் இந்த துரோக உணர்வைத்தான் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதிபலித்துள்ளார். துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு, கையில் கிடைக்கும் எந்த ஆயுதத்தையும் எடுக்கத் தொண்டன் ஆசைப்படுவான். அந்தத் துரோகத்தை வீழ்த்த பாஜக என்ற ஆயுதம் தேவைப்பட்டால், அதைக் கூடப் பயன்படுத்தத் தயாராக வேண்டும் என்ற கோபத்தின் அடிப்படையில்தான் அனிதா ராதாகிருஷ்ணன் அந்தப் பேச்சை வெளிப்படுத்தியுள்ளார்.”

தவெக ஆட்சியில் நடக்கும் அத்துமீறல்கள்; மக்கள் வருத்தம்!

தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணி குறித்து விமர்சித்து வருவது பற்றிய கேள்விக்கு, “நாங்கள் ஒன்று சேர்ந்தால் தாங்கள் காணாமல் போய்விடுவோம் என்ற பயம் விஜய் அவர்களுக்கு வந்துவிட்டது. தவெக ஆட்சிக்கு வந்த இந்த சில நாட்களிலேயே கோயம்புத்தூரில் தம்பதியினரை தவெக கொடிகட்டிய நபர் மிரட்டியது, கிருஷ்ணராயபுரத்தில் தவெக ஒன்றிய செயலாளர் ஒரு பெண் நிர்வாகிக்குத் தொல்லை கொடுத்தது என 70% குற்றங்கள் தவெக நிர்வாகிகளாலேயே நிகழ்த்தப்படுகின்றன. பழனி முருகன் கோவில் நில விவகாரம் என அடுக்கடுக்கான புகார்கள் எழுகின்றன.

கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் மற்றும் தளபதி ஸ்டாலின் கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வர் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களால் பயன் அடைந்த தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள், தற்போது மாற்று ஆட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டோமே என்று மிகுந்த வேதனையோடு பரிகாரம் தேடக் காத்திருக்கிறார்கள். சினிமா வேறு, பக்குவப்பட்ட அரசியல் தலைமை வேறு என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். விரைவில் திராவிட இயக்க ஆட்சி, குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அமைந்து தமிழகத்தின் பழைய பெருமை மீட்டெடுக்கப்படும்” என்று சுப்பரத்னம் உறுதியளித்தார்.

MUST READ