பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அரசு எடுத்துள்ள முடிவு, காலத்தின் தேவையையும் மாநிலத்தின் பொருளாதார எதிர்காலத்தையும் உணராத ஒரு மிக மோசமான மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘நக்கீரன் டிவி’க்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
“சென்னையின் எதிர்கால வளர்ச்சி முடக்கப்பட்டுவிட்டது”
அவர் தனது பேட்டியில், “சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போதைய சூழலில் கடும் போக்குவரத்து நெரிசல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத் தேவைகளைக் கணக்கிட்டு பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைப்பது காலத்தின் கட்டாயமாகும். இத்திட்டத்தின் மூலம் பரந்தூர், பூவிருந்தவல்லி முதல் திருப்பெரும்புதூர் வரையிலான பகுதிகள் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பெற்றிருக்கும். ஆனால், தற்போதைய அறிவிப்பால் தலைநகரின் பொருளாதார வளர்ச்சியும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்று வேதனை தெரிவித்தார்.

“டெல்டா விவசாயிகள் கண்ணீருக்கு ஏன் தீர்வில்லை?”
தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதே நோக்கம் என்றால், காவிரி டெல்டா மண்டல விவசாயிகள் தண்ணீர் இல்லாமலும் பயிர் காப்பீடு கிடைக்காமலும் தவிக்கும் போது இந்த அரசின் பாசம் எங்கே போனது? டெல்டா விவசாயிகளைப் புறக்கணித்துவிட்டு, பரந்தூர் நில உரிமையாளர்களுக்கு மட்டும் அரசு திடீரென ஆதரவு தெரிவிப்பதற்குப் பின்னால் பெரிய கார்ப்பரேட் மற்றும் ரியல் எஸ்டேட் லாபி உள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.
“அதிகார வர்க்கத்தின் லாபியில் அரசு!”
மேலும், “இந்த சர்வதேச விமான நிலையம் சென்னைக்கு அருகே வந்துவிடக் கூடாது எனத் திரைமறைவில் சதி திட்டம் தீட்டிய சுயநலக் கும்பலுக்கு இந்த அறிவிப்பு வெற்றியாக அமைந்துள்ளது. தற்காலிக அரசியல் லாபத்திற்காகவும் தனிப்பட்ட நபர்களின் ஆதாயத்திற்காகவும் உள்கட்டமைப்புத் திட்டங்களை முடக்குவது தமிழ்நாட்டின் எதிர்காலத் தொழில் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்” என்று வல்லம் பஷீர் எச்சரித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 9,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி!
