மேற்கு வங்கத்தில் ‘பெருபாரி’ தீவை மீட்டது போல் கருணாநிதி உச்சநீதிமன்றம் சென்றிருக்க வேண்டும் எனப் பேரவையில் சாடல்
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் வரை சென்று அதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் எனத் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி உரை
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் நிர்மல்குமார், வரலாற்றுச் சம்பவங்களை சுட்டிக்காட்டிப் பேசியதாவது:
“கடந்த காலத்தில் கச்சத்தீவு விவகாரம் போன்றே மேற்கு வங்க மாநிலத்திற்குச் சொந்தமான ‘பெருபாரி’ எனும் தீவை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (தற்போதைய வங்கதேசம்) தாரைவார்க்க மத்திய அரசு முனைந்தது.
ஆனால், அதற்கு எதிராக அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் பி.சி.ராய் அவர்கள் தீவிரமாகப் போராடி, உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி பெருபாரி தீவை மத்திய அரசு தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்திச் சாதனை படைத்தார்.”
“கருணாநிதி தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்” தொடர்ந்து பேசிய அமைச்சர், அன்றைய கட்டத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்ட போதிலும், தமிழகக் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மாநிலத்தின் நலனையும் கருத்தில் கொண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதைச் செய்யத் தவறியதால் இன்றளவும் நமது தமிழக மீனவர்கள் கடலில் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்” என்று கடுமையாக விமர்சித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு பேரவையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
