சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இளைஞரிடம், குறும்படம் தயாரிக்க முதலீடு செய்வதாகக் கூறி ஏமாற்றி ரூ.5 லட்சத்திற்கு மேல் மிரட்டிப் பறித்த புகாரில், பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வர்ஷினி வெங்கட் உட்பட 4 பேர் மீது கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், நடிகை வர்ஷினியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகாரின் பின்னணி
சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் 26 வயது இளைஞர் தங்கியிருந்தார். அப்போது விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட் அந்த இளைஞரிடம் அறிமுகமாகியுள்ளார்.

தான் தயாரிக்கவிருக்கும் குறும்படம் ஒன்றில் முதலீடு செய்யுமாறு அவர் அந்த இளைஞரை வலியுறுத்தியுள்ளார். அத நம்பி அவர் பணம் கொடுத்ததாகவும், பின்னர் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது பிரச்சினை வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் மற்றும் மிரட்டல்
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்ட அந்த இளைஞரை, வர்ஷினி மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கியுள்ளனர். மேலும், அவரிடமிருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கத்தைப் பறித்துக் கொண்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வங்கிப் பரிவர்த்தனை (Online Transfer) மூலமாக மேலும் ரூ. 5 லட்சம் வரை அவர்களது கணக்கிற்குப் பணத்தைப் பறித்துள்ளனர். இதோடு நிற்காமல், மேலும் ரூ. 27 லட்சம் கேட்டு மிரட்டியதுடன், பணம் தராவிட்டால் போக்ஸோ அல்லது வேறு ஏதேனும் பொய் வழக்குத் தொடர்வோம் என்றும் அவர்கள் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
3 பிரிவுகளின் கீழ் வழக்கு மற்றும் கைது
இளைஞரின் புகாரின் அடிப்படையில், கிண்டி காவல் துறையினர் நடிகை வர்ஷினி வெங்கட், சஞ்சய் உள்ளிட்ட 4 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தலைமறைவாக இருந்த நடிகை வர்ஷினியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல நடிகை ஒருவர் இளைஞரிடம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஊடக வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 5 மாதங்களில் சோகம்: ஈகோ பிரச்சனை காரணமாக ஐ.டி பெண் ஊழியர் தற்கொலை!
