Homeசெய்திகள்ஆவடிரயிலில் ரூ.12 லட்சம் தங்கம், ரூ.1.91 லட்சம் பணம்! ஆசைப்படாமல் ஒப்படைத்த கல்லூரி மாணவர்கள் –...

ரயிலில் ரூ.12 லட்சம் தங்கம், ரூ.1.91 லட்சம் பணம்! ஆசைப்படாமல் ஒப்படைத்த கல்லூரி மாணவர்கள் – ரயில்வே போலீஸ் பாராட்டு!

-

- Advertisement -

ரயிலில் தவறவிடப்பட்ட சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.1.91 லட்சம் ரொக்கப் பணம் அடங்கிய பையை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்த 2 கல்லூரி மாணவர்களின் நேர்மையை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

we-r-hiring

ரயிலில் தவறவிடப்பட்ட நகை, பணம்

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தைச் சேர்ந்த 50 வயதான ஹீராலால், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனியில் தங்க நகைக் கடை மற்றும் அடகுக் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 2-ம் தேதி பிற்பகல் புதிய நகைகளை வாங்குவதற்காக அண்ணனூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். தனது தோள்பையை இருக்கைக்கு மேலே உள்ள ரேக்கில் வைத்துவிட்டு அவர் தூங்கியதாக கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் வந்ததும் தூக்கக் கலக்கத்தில் தவறுதலாக வேறொரு பயணியின் பையை எடுத்துக்கொண்டு இறங்கியுள்ளார். பின்னர் சவுகார்பேட்டை சென்றபோது பை மாறியிருப்பதை உணர்ந்து, உடனடியாக சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பையை போலீஸாரிடம் ஒப்படைத்த மாணவர்கள்

இதற்கிடையே, லயோலா கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் 19 வயதான ஜெயஸ்வேல் மற்றும் டிஆர்பிசிசிசி இந்து கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் 20 வயதான கமலேஷ் ஆகிய இரு மாணவர்கள், ரயிலில் கிடைத்த அந்தப் பையை ஆவடி ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர்.

ரயில் பயணத்தின்போது தங்களது பை மாறியதாகவும், ரேக்கில் இருந்த பையை எடுத்துச் சென்றதாகவும் மாணவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பையில் இருந்தது என்ன?

மாணவர்கள் ஒப்படைத்த பையில் 153.38 கிராம் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளி மற்றும் ரூ.1.91 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது.

பின்னர் அந்தப் பை சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஹீராலாலை வரவழைத்து, ரயில்வே காவல் ஆய்வாளர் அமலாரத்தினம் முன்னிலையில் பையில் இருந்த பொருட்கள் சரிபார்க்கப்பட்டன.

தொடர்ந்து, உரிய நடைமுறைகளின்படி நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தங்க நகைகள் மற்றும் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாணவர்களின் நேர்மைக்கு பாராட்டு

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் பணமும் இருந்தபோதிலும், அதற்கு ஆசைப்படாமல் உடனடியாக ரயில்வே போலீஸாரிடம் பையை ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன் வெகுவாக பாராட்டினார்.

இந்த சம்பவம், ரயில் பயணத்தில் கிடைத்த விலைமதிப்புள்ள பொருட்களை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்புணர்வுக்கு மாணவர்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

பயிற்சியாளர்களுக்கும் சமமான ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: தங்கப்பதக்க வீராங்கனை வித்யா ராம்ராஜ் கோரிக்கை – ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற வீராங்கனைக்கு பிரம்மாண்ட வரவேற்பு

MUST READ