கேள்வி – தவெக அரசாங்கத்தில் பா.ம.க இணைந்தால் விசிக அமைச்சரவையில் இருந்து வெளியே வந்துவிடும் என்று திருமாவளவன் பேசிவருகிறாரே, உங்கள் கருத்து என்ன?


பதில் – தமிழக அரசியல் களம் வரலாறு காணாத வகையில் தற்போது பல புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. அதில் கூட்டணி அரசில் தவெகவுடன் பாமக இணைந்தால் அமச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்ற நிலைப்பாட்டை விசிக எடுப்பது சரியான அரசியல் முடிவாக இருக்காது. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள் தலித் மக்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பெரிய இழப்பையே ஏற்படுத்தும்.
தமிழகத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடவும், சமூக அழுத்தம் கொடுக்கவுமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உருவாக்கப்பட்டது. அது ஒரு மாபெரும் முன்னகர்வே. ஆனால், அந்தப் போராட்டக் களத்தின் எல்லை தற்போது மாறி, அரசு அதிகாரத்திற்கு விசிக வந்து சேர்ந்துள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி அரசில் அதிகாரப்பங்கு கிடைத்துள்ளதை வெற்றிகரமாகக் கையாள்வதும், எதிர்காலத் தேர்தல்களிலும் அதிகாரப் பகிர்வை தொடர்ந்து வலியுறுத்துவதுமே இன்றைய அவசியமான தேவையாகும்.
நேரடி அதிகாரத்தின் பலனும் அமைச்சரின் செயல்பாடுகளும்
கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் கிடைக்கும் நேரடி அதிகாரத்தின் பலனை இன்று தலித் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
- விசிகவைச் சேர்ந்த திரு. வன்னியரசு அவர்களின் செயல்பாடுகள் நேர்மையானவையாகவும், உண்மையான அக்கறை கொண்டவையாகவும் உள்ளன.
- தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக அவர் நேரடியாக விடுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
- தமக்கென சொந்த அதிகாரம் கொண்ட தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இதற்கு முன் அமைந்ததில்லை; இது கூட்டணி அரசால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது.
நிர்வாக ரீதியான தடைகளைத் தாண்டி, கிடைத்திருக்கும் இந்த அதிகாரத்தைக் கொண்டு தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே விசிக செய்ய வேண்டிய முதன்மைக் பணியாகும்.
பாமக தலித்துகளின் முதன்மை எதிரி அல்ல. விசிகவுக்கும் பாமகவுக்கும் இடையேயான முரண்பாடுகளும், ஆதரவுத் தளங்களில் மோதல்களும் இருப்பது இயல்பே. ஆனால், ஒரு கூட்டணி அரசில் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; மாறுபட்ட பார்வைகள் கொண்ட கட்சிகள் பொதுவான செயல்திட்டத்துடன் இணைந்து செயல்படுவதே கூட்டணி ஆட்சியின் இயல்பு.
பாமக தலித் நலனுக்கு எதிராகச் செயல்பட்டால், அங்கியிருந்தபடியே அதை எதிர்த்துப் போராட முடியும். முகநூல் சண்டைகளை அடிப்படையாகக் கொண்டு அவசரப்பட்டு அரசியல் முடிவுகளை எடுப்பது அரசியல் பிழையாக முடியும்.
