முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் மத்தியில் எழுச்சியான ஆதரவு இருப்பதால் பொறாமையில் விமர்சிக்கின்றனர் – புதுக்கோட்டையில் அமைச்சர் பேட்டி!![]()
முதலமைச்சர் புதுக்கோட்டைக்கு வருகை தந்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது பொறாமையின் வெளிப்பாடு என்றும், அவர்களின் விமர்சனங்களுக்கு பதிலடியைச் செயலில் காட்டுவோம் என்றும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வருகை – புதுக்கோட்டையில் பிரம்மாண்ட அரசு விழா!
தமிழக முதலமைச்சர் நாளை மறுநாள் புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளார். அப்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை நேரில் சென்று திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, காணொளிக் காட்சி வாயிலாக உள்விளையாட்டு அரங்கைத் திறந்து வைக்கிறார். மேலும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 14 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1,200 முதல் 2,000 பயனாளிகள் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளைப் பெற உள்ளனர்.
ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ரோடு ஷோ நடத்த இதுவரை திட்டமில்லை!
முதலமைச்சரின் வருகையையொட்டி அரசு நிகழ்ச்சி என்பதால் கட்சிக் கொடிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
முதலமைச்சரின் ரோடு ஷோவுக்கு இதுவரை எந்தத் திட்டமும் இல்லை. அவர் வரும் வழியில் பொதுமக்கள் இருந்தால் அவர்களைச் சந்திப்பார். ரோடு ஷோ நடத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்பட்டால் அறிவிக்கப்படும்.
முதலமைச்சரைப் பார்ப்பதற்காக அதிகளவில் பொதுமக்கள் வரக்கூடும் என்பதால், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகளை அமைத்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
அரசு பணத்தில் திட்டங்கள் – திமுகவினருக்கு அமைச்சர் கேள்வி!
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் புதுக்கோட்டைக்கு வருவதாக திமுகவினரே விமர்சிப்பது குறித்து அமைச்சர் பேசுகையில்,
“அவர்கள் என்ன சொந்தப் பணத்தில் திட்டங்களைக் கொண்டு வந்தார்களா? அரசு பணத்தில்தான் புதிய பேருந்து நிலையத்தையும் உள்விளையாட்டு அரங்கையும் கட்டியுள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுகவினர் தொடங்கி வைத்தது இல்லையா?
விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தற்போது பேசுகின்றனர். முதலமைச்சரை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து அரசு நிகழ்ச்சி நடத்துவது மக்களிடம் அவருக்கு எழுச்சியான ஆதரவு இருப்பதால்தான்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வன்மத்திலும் பொறாமையிலும் விமர்சித்து வருகின்றனர். இதனைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை” என்றார்.
மாவட்டத்திற்குத் தேவையான திட்டங்களைப் பெற்றுத் தருவேன்!
மேலும் அவர் பேசுகையில்,
“புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சரிடம் வருகை தருமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் வருகை தருகிறார். நமது முதலமைச்சர் சுறுசுறுப்பாகச் செயல்படக்கூடியவர்.
மாவட்டத்திற்கு என்னென்ன தேவையோ அவற்றை மாவட்ட அமைச்சரான நான் பார்த்துப் பார்த்து பெற்றுத் தருவேன்.
எதிர்க்கட்சியினர் ஒருபோதும் பாராட்ட மாட்டார்கள். முதலமைச்சர் வருகையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையில் விமர்சிக்கின்றனர். அவர்களின் விமர்சனங்களுக்கு நாங்கள் செயலில் பதிலடி கொடுப்போம்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் மூலம் அழைப்பு விடுக்கப்படும்” என்றார்.
இவ்வாறு புதுக்கோட்டையில் அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
