Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 37 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 37 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

-

- Advertisement -

சிறப்பு அதிகாரிகள் நியமன அரசாணையை ரத்து செய்யக் கோரிக்கை – வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டுப் பணிகளை முடித்து தேர்தல் நடத்த வலியுறுத்தல்!தமிழகத்தில் 37 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறைப் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

we-r-hiring

28 மாவட்டங்களில் பதவிக்காலம் முடிவடைந்தது!

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளைச் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது 28 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை 2027 ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

இதேபோல், கடந்த அக்டோபர் 19-ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளையும் நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதவிக்காலமும் 2027 ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த அரசாணையை எதிர்த்து, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர். பாஸ்கரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், புதிதாக 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 93 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 23 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை எனக் காரணம் கூறி சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசன விதிகள் மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டு!

சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அரசாணையில் இடம்பெறவில்லை என்றும், சிறப்பு அதிகாரிகள் நியமனம் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு வார்டு மறுவரையறையை காரணமாகக் கூற முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாணையை ரத்து செய்யக் கோரிக்கை!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

மேலும், உரிய காலக்கெடுவுக்குள் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டுப் பணிகளை முடித்து ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், சிறப்பு அதிகாரிகள் கொள்கை முடிவுகளை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாகச் சேர்க்க வேண்டும் – முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் அதிரடிப் பேட்டி!

MUST READ