திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, அரசு பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்திய நடத்துநர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடத்துநரை மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் அடுத்தடுத்து பேருந்துகளை சாலையில் நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து தடம் எண் 61-கே மாநகரப் பேருந்து, 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை ஆவடி பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்தப் பேருந்தை கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (55) ஓட்டிச் சென்றார். திருத்தணியைச் சேர்ந்த சர்வேசன் (50) நடத்துநராகப் பணியில் இருந்தார்.
அப்போது தனியார் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த நடத்துநர் சர்வேசன், மாணவர்களைப் படிக்கட்டில் இருந்து உள்ளே வருமாறும், இல்லையெனில் பேருந்தில் இருந்து இறங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் மாணவர்களுக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேருந்து கன்னடபாளையம் நிறுத்தத்தில் நின்றபோது கீழே இறங்கிய மாணவர்கள், நடத்துநரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மாணவர்களில் இருவர் சர்வேசனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். நடத்துநர் தாக்கப்பட்ட தகவல் அறிந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், சம்பவத்தைக் கண்டித்து அவ்வழியாக வந்த பேருந்துகளை அடுத்தடுத்து சாலையில் நிறுத்தினர்.
தாக்குதல் நடைபெற்ற பேருந்து உட்பட மொத்தம் ஐந்து அரசு பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அவற்றில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து பேருந்துகளும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.
அரசு பேருந்து நடத்துநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் பரவி வரும் நிலையில், போலீசார் மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு: சார் பதிவாளர் அலுவலகம் முன் முதிய தம்பதி திடீர் தர்ணா..
