முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறையில் இருந்த பேரறிவாளன், உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து சட்டம் பயின்ற அவர், வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் வழங்கக் கோரி கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, காவல்துறையினர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால், விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் பேரறிவாளன் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பரிசீலித்து நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
