
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஜூன் மாதத்தில் ஊடுருவிய ‘அகல் விளக்கு’ போலி நூல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

கோவை ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில், தற்போது மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முத்திரைகளில் வெளிப்பட்ட உண்மை:
பெரியார் அறிவுலக நூலகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் பல கோடி ரூபாய்க்கு மெகா மோசடி அரங்கேறியுள்ளதை எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தியுள்ளார். இதில் திமுக ஆட்சியில் தான் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக தவெக தரப்பும், தற்போதைய ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதாக திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த பின்னர் நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழ் ஆர்வலர்கள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்:

சரியான நூல்கள் (மார்ச் முத்திரை): நூலகத் தேர்வுக்குழு மூலம் முறையாகத் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்ட மற்ற முன்னணிப் பதிப்பகங்களின் நூல்களில் ‘மார்ச் மாதம்’ என்ற முத்திரை இடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சரியான முகவரி மற்றும் நியாயமான சந்தை விலையுடன் கூடிய அசல் நூல்களாக உள்ளன.
போலி நூல்கள் (ஜூன் முத்திரை): ஆனால், சர்ச்சைக்குரிய ‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ ஆகிய போலிப் பதிப்பகங்களின் நூல்களில் மட்டும் ‘ஜூன் மாதம்’ என்று முத்திரை இடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் நடந்த மோசடி?
நூலகத்திற்கான புத்தகங்களை அரசு அமைத்த தேர்வுக்குழு முறைப்படி தேர்வு செய்து முடித்த பின்னரே இந்த முறைகேடு அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் காலத்தில் ஊடுருவல்: சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, மாநில அரசின் நிர்வாகம் முழுமையாகத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission) கட்டுப்பாட்டிற்குச் சென்ற இடைப்பட்ட காலத்தில் தான், ‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ பதிப்பகங்களின் போலி நூல்கள் நூலகத்திற்குள் ஊடுருவச் செய்யப்பட்டுள்ளதாக புது தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

எளிதில் கண்டறிய வாய்ப்பு: மார்ச் மற்றும் ஜூன் மாத முத்திரைகளுக்கு இடையேயான இந்த கால வேறுபாட்டைக் கொண்டே, எந்தக் காலகட்டத்தில் மற்றும் யாரால் இந்த போலி நூல்கள் உள்ளே கொண்டு வரப்பட்டன என்பதை மிக எளிதாகக் கண்டறிய முடியும் எனக் குறிப்பிடும் அவர்கள், அகல் விளக்கு பதிப்பகம் சார்பாக யாருடைய வங்கி கணக்குக்கு இந்த புத்தகக் கொள்முதலுக்கான பணம் செலுத்தப்பட்டது என்பதை தவெக அரசு வெளியிட்டால் உண்மை எளிதில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு அழுத்தம் தரும் தமிழ் ஆர்வலர்கள்:
பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நூலகத்தில், தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்த நேரத்தைப் பயன்படுத்தி இத்தகைய பெரிய அளவிலான முறைகேடு நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தற்போதைய அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலி நூல்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் தமிழ் ஆர்வலர்களும் பல்வேறு அமைப்பினரும் அழுத்தங்களைச் செலுத்தி வருகின்றனர்.

