புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க குடும்பம் குடும்பமாகக் குவியும் மக்கள் – பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார்!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரையின் முக்கிய வணிகப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மதுரை விளக்குத்தூண் பகுதியில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து புத்தாடைகள் மற்றும் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

மதுரையின் முக்கிய வணிகப் பகுதிகளான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்துத்தூண், மஞ்சனக்காரத்தெரு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கடைகளில் மட்டுமின்றி சாலையோரக் கடைகளிலும் குறைந்த விலையில் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கைப்பைகள், தலையணைகள், பாய்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களைத் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர்.
பண்டிகைக்கு முந்தைய கடைசி நாள்களில் பொருட்கள் வாங்குவதற்காக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வணிக வீதிகளுக்கு வருவதால் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்கவும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாநகரின் முக்கிய வணிகப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
ஒலிபெருக்கிகள் வாயிலாகவும் காவல்துறையினர் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதால், மதுரை வணிக வீதிகளில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
