கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட அரசம்பட்டு கிராமத்தில் முறையான சாலை மற்றும் வடிகால் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அப்பகுதியில் பெய்த மழையால் தெருக்களில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சாலையைச் சீரமைக்கவும், முறையான வடிகால் வசதி ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரைக் கண்டித்து, சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் இறங்கி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையைச் சீரமைக்கக் கோரி பெண்கள் நூதன முறையில் நடத்திய இந்தப் போராட்டத்தால் அரசம்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
