Homeசெய்திகள்மாவட்டம்பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் கட்டணக் கொள்ளையா? ஆண்டுக்கு ரூ.75 லட்சம் பராமரிப்பு நிதி ஒதுக்கியும் மாணவர்களிடம்...

பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் கட்டணக் கொள்ளையா? ஆண்டுக்கு ரூ.75 லட்சம் பராமரிப்பு நிதி ஒதுக்கியும் மாணவர்களிடம் கூடுதல் வசூல் – முன்னாள் மாணவர் புகார்!

-

- Advertisement -

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், மின்சாரம், குடிநீர் மற்றும் பராமரிப்புச் செலவுகளையும் மாணவர்களிடமே கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் கட்டணக் கொள்ளையா? ஆண்டுக்கு ரூ.75 லட்சம் பராமரிப்பு நிதி ஒதுக்கியும் மாணவர்களிடம் கூடுதல் வசூல் – முன்னாள் மாணவர் புகார்!

விடுதி அறை வாடகை உயர்வு மற்றும் வசூலிக்கப்படும் தொகைகளுக்கான செலவுக் கணக்குகள் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்றும் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ளார்.**

பல்கலைக்கழகப் பதிவாளரிடம் புகார் மனு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை படித்து, அங்குள்ள சேக்கிழார் விடுதியில் தங்கியிருந்தவர் முன்னாள் மாணவர் பிரகாஷ். இவர் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் விடுதிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடர்பாகப் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், பல்கலைக்கழக விடுதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், விடுதி அறைகளுக்குப் பெயின்ட் அடித்தல், மின்சாதனங்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட அடிப்படைப் பராமரிப்புப் பணிகளுக்குக்கூட மாணவர்களிடமே பணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மாதந்தோறும் கூடுதல் செலவுச் சுமை

இதுகுறித்து முன்னாள் மாணவர் பிரகாஷ் கூறுகையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும் மின்சாரக் கட்டணத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம் செலுத்தும் நிலையில், மாணவர்களிடம் மாதந்தோறும் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை மெஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், குடிநீர் மற்றும் இதர பராமரிப்புச் செலவுகளும் மாணவர்களின் சுமையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ரூ.200 ஆக இருந்த அறை வாடகை ரூ.500 ஆக உயர்வு

முன்பு ரூ.200 ஆக இருந்த விடுதி அறை வாடகை தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் 13 விடுதிகளில் சுமார் 2,500 மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், அறை வாடகை மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தொகை எந்தெந்தப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது, பராமரிப்புக்காக ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பன குறித்த முறையான கணக்குகள் மாணவர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

ஏழை, நடுத்தர மாணவர்கள் பாதிப்பு

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில பல்கலைக்கழக விடுதிகளை நம்பி வரும் நிலையில், கூடுதல் கட்டணச் சுமை அவர்களைப் பாதிப்பதாகப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதிக் காப்பாளர் மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

விசாரணைக் குழு அமைத்து விசாரிப்பதாகக் கூறப்படுவதைத் தவிர, மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கட்டணத்தைக் குறைத்து தணிக்கை விவரங்களை வெளியிடக் கோரிக்கை

எனவே, விடுதி அறை வாடகையைக் குறைக்க வேண்டும் என்றும், ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் ரூ.75 லட்சம் பராமரிப்பு நிதி மற்றும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் அறை வாடகை உள்ளிட்ட தொகைகளின் வரவு, செலவு விவரங்களை முறையாகத் தணிக்கை செய்து வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மின்சாரம், குடிநீர் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்த்து, பல்கலைக்கழக நிர்வாகமே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக விடுதிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் பராமரிப்பு நிதி பயன்பாடு தொடர்பான இந்தப் புகார்கள் குறித்து நிர்வாகத்தின் விளக்கம் வெளியாகவில்லை.

சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு! – திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் கவிதா அறிவுறுத்தல்!

MUST READ