Homeசெய்திகள்சென்னைமணலி காவல் நிலையத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக லாரி ஓட்டுநர் அடைத்து வைக்கப்பட்டதாகப் புகார்...

மணலி காவல் நிலையத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக லாரி ஓட்டுநர் அடைத்து வைக்கப்பட்டதாகப் புகார் – நீதிபதி நேரில் திடீர் ஆய்வு; ஆய்வாளரைச் சஸ்பெண்ட் செய்ய வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்!

-

- Advertisement -

சென்னை மணலி காவல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவராமன் என்பவர் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருவொற்றியூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மணலி காவல் நிலையத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக லாரி ஓட்டுநர் அடைத்து வைக்கப்பட்டதாகப் புகார் – நீதிபதி நேரில் திடீர் ஆய்வு; ஆய்வாளரைச் சஸ்பெண்ட் செய்ய வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்!

இதற்கிடையே, சம்பவத்தைக் கண்டித்து மணலி காவல் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 15-ஆம் தேதி மதியம் 2 மணியளவில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவராமனை, மணலி காவல் ஆய்வாளர் தலைமையிலான ரமேஷ் மற்றும் கொடியரசு ஆகிய காவலர்கள் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. முதலில் திருவாரூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து சென்னை மணலி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ள நிலையில், சிவராமன் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கும் மேலாகியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை எனப் புகார் எழுந்தது.

மேலும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு சிவராமன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சர்மிளா, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திக், உடனடியாக மணலி காவல் நிலையத்திற்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சிவராமன் காவல் நிலையத்தில் இருக்கிறாரா? அவரை ஏன் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை? என்பது குறித்து காவல் ஆய்வாளரிடம் நீதிபதி கேள்வி எழுப்பி விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல் நிலையம் முன்பு திரண்ட வழக்கறிஞர்கள், சந்தேகத்தின் பேரில் அழைத்து வரப்பட்ட ஒருவரைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மணலி காவல் ஆய்வாளரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், சிபிசிஎல் (CPCL) எண்ணெய் திருட்டு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி எனக் கூறப்படும் மணலியைச் சேர்ந்த ‘தலைவாய் பாண்டியன்’ என்பவரைக் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை என்றும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

முக்கியக் குற்றவாளி எனத் தாங்கள் குறிப்பிடும் நபரை விட்டுவிட்டு, அப்பாவியான லாரி ஓட்டுநர் சிவராமனைக் கைது செய்து சட்டவிரோதக் காவலில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினர்.

கடந்த செப்டம்பர் மாதம் கமலக்கண்ணன் என்ற போக்குவரத்து நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம் பகுதியில் இருந்து 26 ஆயிரம் லிட்டர் குரூட் ஆயிலை பிபிசிஎல் நிறுவனத்திற்குக் கொண்டு சென்றபோது, அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மணலி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் மணலி காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற மறுப்பு? – ₹10 டெபாசிட் தொகையைத் திருப்பிக் கேட்டு மதுப்பிரியர்கள் வாக்குவாதம்; வீடியோ வைரல்!

MUST READ