
பரந்தூர் விமான நிலையத்திற்காக 48% நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், எந்தவித ஆய்வுமின்றித் திட்டத்தைக் கைவிட்டது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் இரண்டாவது பசுமைவெளி விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை முந்தைய திமுக அரசு மேற்கொண்டு வந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய தவெக அரசு பரந்துரு விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மனுவின் முக்கிய அம்சங்கள்:
சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கௌதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் முன்வைத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் பின்வருமாறு:
ரூ.680 கோடி மக்கள் பணம் விரயம்: பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.680 கோடி செலவிடப்பட்டு, 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு பணிகள் முடிந்த நிலையில், திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகள் இன்றி எடுக்கப்பட்ட முடிவு: எந்தவித தொழில்நுட்பப் புள்ளிவிவரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகளோ அல்லது பொருளாதார ஆய்வுகளோ எதுவும் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அறிவிப்புக்குத் தடை விதிக்கக் கோரிக்கை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.
மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்: இத்திட்டத்தைக் கைவிட்ட முடிவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது (Unconstitutional) என அறிவிக்க வேண்டும் என்றும், திட்டத்தைக் கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மென்பொறியாளர் கௌதமன் தாக்கல் செய்துள்ள இந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – 2 பேர் கைது!

