தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும் சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவினர் நேற்று தேக்கம்பட்டி சிறைக்கு வந்து, கைதிகள் தப்பிச் சென்றபோது பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவரான மீனாட்சி சுந்தரம், காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அந்த வீடியோவில், தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் துன்புறுத்தப்படுவதாகவும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், தங்களைப் பார்ப்பதற்காக மனு அளித்து வரும் உறவினர்களைச் சந்திக்க சிறைத்துறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி வெளியிட்ட இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுகிறார்களா, அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவா, தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா தேக்கம்பட்டி சிறைக்கு வருகை தந்துள்ளார்.
அவருடன் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யபிரியா, ஆண்டிப்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா, கண்டமனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராதா உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.
தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிச் சென்று பின்னர் பிடிபட்ட 17 கைதிகளும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து, தற்போது தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளிடம் சிறை நிர்வாகத்தினரால் ஏதேனும் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டனவா, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றனவா என்பது குறித்து மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விசாரணை முடிவடைந்த பின்னர், மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அந்த அறிக்கைக்குப் பின்னரே, சிறைக் கைதி மீனாட்சி சுந்தரம் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து தெரியவரும்.
