கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சித் தலைவர் எட்வின் ஜோஸ் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து குளச்சல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூராட்சிக்குச் சொந்தமான திடக்கழிவு மேலாண்மைக் கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவரை அனுமதியின்றி இடித்து, அங்கிருந்த கட்டுமானப் பொருள்களை எடுத்துச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லியோன் நகர் பகுதியில், கடந்த 2024-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டு, அதற்குச் சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, 2025-ம் ஆண்டு அந்தப் பகுதியில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த திடக்கழிவு மேலாண்மைக் கட்டிடம் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி பேரூராட்சித் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான எட்வின் ஜோஸ் தன்னிச்சையாகக் கட்டிடத்தை இடித்து, அங்கிருந்த கட்டுமானப் பொருட்களை எடுத்துச் சென்றதாகப் புகார் எழுந்தது.
மேலும், அந்தப் பொருட்களைக் கண்டர்விளாகம் பகுதியில் உள்ள தனது வீட்டின் சுற்றுச்சுவர் கட்டுவதற்குப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக ரீத்தாபுரம் பேரூராட்சி கவுன்சிலர் ஜெயசேகர், அப்போதே மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பேரூராட்சிக்குச் சொந்தமான திடக்கழிவு மேலாண்மைத் திட்டக் கட்டிடத்தை உரிய அனுமதியின்றி இடித்து, அங்கிருந்த கதவு, ஜன்னல், கட்டைகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் மற்றும் கருங்கற்களை எடுத்துச் சென்றதாகப் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார் இன்று குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ரீத்தாபுரம் பேரூராட்சித் தலைவர் எட்வின் ஜோஸ் மீது குளச்சல் போலீஸார் திருட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
t!
கன்னியாகுமரியில் பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை!
