Homeசெய்திகள்சட்டம்உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசு அலட்சியப்படுத்த முடியாது: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர் நீதிமன்றம்...

உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசு அலட்சியப்படுத்த முடியாது: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு எக்காரணம் கொண்டும் அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களைத் தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி வாதிட்டார்.

அரசுத் தரப்பு வாதம்

விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் நிச்சயமாகப் பின்பற்றுவார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். தமக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இதனை நீதிமன்றத்தில் பதிவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சர்ச்சைக்குரிய தூணை நேரடியாக ‘தீபத்தூண்’ என்று குறிப்பிடாமல், ‘மனுதாரர்களால் தீபத்தூண் என்று குறிப்பிடப்படும் தூண்’ என்றே உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அவர் விளக்கினார். ஏற்கெனவே அங்கு ஒரு தீபத்தூண் இருப்பதால், மற்றொரு தூணையும் அதே பெயரில் குறிப்பிட்டால் குழப்பம் ஏற்படலாம் என்றும், நீதிமன்ற ஆவணங்களிலும் அதே சொற்றொடரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தக் கூடாது – நீதிபதிகள்

அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாநில அரசு விளையாடவோ அல்லது அதனை அலட்சியப்படுத்தவோ அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய கடமை இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரிகளுக்கு அவர்களது அரசியலமைப்புச் சட்டக் கடமைகளை மட்டுமே நினைவூட்டுவதாகவும் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும் என உறுதியளித்துள்ளதால், இந்த ரிட் மனுக்களை மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினரால் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், ரிட் மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: விடுமுறை நாட்களில் சீராய்வு மனு தாக்கல் – அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? உச்சகட்ட எதிர்பார்ப்பில் தமிழகம்!

MUST READ