தமிழ்நாட்டின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்காக உலக வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடி உயர தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இத்திட்டம் அதன் இயற்கைச் சூழலைப் பாதித்து, ஆக்கிரமிப்பு மற்றும் சீரழிவுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து உலக வங்கி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் நகல்கள் உலக வங்கியின் இந்திய இயக்குநர் (பொறுப்பு) பால் ப்ரோசீ (Paul Procee) மற்றும் இந்திய தலைமைப் பொருளாதார வல்லுநர் ஆரேலியன் க்ரூஸ் (Aurelien Kruse) ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உலக வங்கி விசாரணை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
