தேனி மாவட்டம் வருசநாடு அருகே மஞ்சனூத்து மலைக்கிராமத்தில் காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட அரசுப் பள்ளிக் குழந்தைகள் 12 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வருசநாடு அருகே உள்ள மஞ்சனூத்து மலைக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத இந்தப் பள்ளியில் மஞ்சனூத்து, ஒட்டுக்கல், திருப்பூர் ஆகிய மலைக் கிராமங்களைச் சேர்ந்த 18 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் மலைப்பகுதியில் விளைந்திருந்த காட்டு ஆமணக்கு விதைகளைப் பள்ளிக் குழந்தைகள் சிலர் விளையாட்டாகச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீடுகளுக்குச் சென்ற குழந்தைகளில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இன்று காலை பள்ளிக்கு வந்த மேலும் 10 குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பள்ளிச் சீருடையிலேயே அந்த 10 குழந்தைகளும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்டதால் மொத்தம் 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மலைக்கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
