Homeசெய்திகள்சட்டம்போலி புத்தகங்களால் தமிழகத்தின் பொது நூலகங்கள் அழியும் அபாயம் – சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்....

போலி புத்தகங்களால் தமிழகத்தின் பொது நூலகங்கள் அழியும் அபாயம் – சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி கடும் எச்சரிக்கை!

-

- Advertisement -

போலி புத்தகங்களால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றும், தவறான உள்ளடக்கம் கொண்ட இத்தகைய புத்தகங்கள் தலைமுறைகளின் அறிவை மாசுபடுத்தும் என்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.போலி புத்தகங்களால் தமிழகத்தின் பொது நூலகங்கள் அழியும் அபாயம் – சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி கடும் எச்சரிக்கை!

மேலும், போலி புத்தகங்கள் தொடர்ந்து நூலகங்களில் இடம்பெற்றால், தமிழகத்தின் பொது நூலகங்கள் அழிந்து, எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்திற்கு ஏற்பட்ட நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பொது நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, ‘அகல் விளக்கு’ மோகனை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அனுமதி கோரியது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, மோகனை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவில் போலி புத்தகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீதிபதி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

போலி புத்தகங்களால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பும் சேதமும் ஈடு செய்ய முடியாதவை மட்டுமல்ல, மன்னிக்க முடியாதவையும் ஆகும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட போலி புத்தகங்கள் தலைமுறைகளின் அறிவை மாசுபடுத்துவதுடன், அவற்றைப் படிக்கும் வாசகர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நூலகம் என்பது ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டின் அடையாளம் என்றும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்றலை ஊக்குவிக்கும் சிந்தனைக் களஞ்சியம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் விளக்கியுள்ளார்.

நூலகத்தின் அலமாரிகள் ஞானத்தின் புகலிடமாகவும், மனித சிந்தனைகளின் காப்பகமாகவும் திகழ்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், அவற்றில் கற்பனையான ஆசிரியர்களின் பெயர்களில் வெளியிடப்பட்ட போலி புத்தகங்களும், பிறரது எழுத்துகளைத் திருடி உருவாக்கப்பட்ட பக்கங்களும், தவறான தகவல்களைக் கொண்ட கள்ளப் புத்தகங்களும் இடம்பெறுவது நாகரிகம் மற்றும் பண்பாட்டுக்கு எதிரான கடுமையான குற்றம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், போலி புத்தகங்களை வாசிப்பவர்களும், பொது நூலகங்களைப் பயன்படுத்தும் வாசகர்களும் கண்ணுக்குத் தெரியாத வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையை எண்களால் அளவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

போலி புத்தகங்கள் தொடர்ந்து பொது நூலகங்களில் இடம்பெற்றால், தமிழகத்தின் பொது நூலகங்கள் விரைவில் அழியும் நிலை ஏற்படலாம் என்றும், எகிப்தில் அழிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் நிலையை அவை அடையக்கூடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

நூலகங்களுக்காக கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போலி புத்தகங்களின் எண்ணிக்கை, அவற்றை பொது நூலகங்களுக்கு வாங்கப் பரிந்துரைத்த நிபுணர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய பிற உண்மைகளைக் கண்டறிய, சம்பந்தப்பட்ட நபரைக் காவலில் வைத்து விசாரிப்பது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உதவியாக இருக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்காக அகல்விளக்கு மோகனை காவலில் எடுக்க அடிப்படைத் தேவை இருப்பதாகக் கருதிய நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, அவரை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

நூலக புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு புகார்: ஆய்வு செய்ய மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமித்த சென்னை உயர்நீதிமன்றம்!

MUST READ