9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 86 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை – சேலம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 86 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் அருகே தாதம்பட்டி காந்தி நகர் காலனி, பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி (86). இவர் அதே பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையில் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கழிப்பறைக்குச் சென்றபோது, அம்மாசி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் தாய் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அம்மாசியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, குற்றம் சாட்டப்பட்ட அம்மாசிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
