
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் மூலம் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயரவுள்ளதாகவும், தமிழகத்தில் 351 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (நவ.28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:
தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு
“தொகுதி மறுவரையறைக்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கடந்த முறை கொண்டு வரப்பட்ட ஒன்றிய அரசின் மசோதாவில் சில தெளிவுகள் இல்லாமல் இருந்தன; ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
* தொகுதிகள் உயர்வு: ஒட்டுமொத்தமாகத் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து 816 ஆக மாறவுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 39-ல் இருந்து 59-ஆக உயரும்.
* சட்டமன்றத் தொகுதிகள்: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 50 சதவீதம் உயர்ந்து, இனி 351 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்.
* பெண்கள் பிரதிநிதித்துவம்: 33 சதவீத நேரடி இடஒதுக்கீட்டின் கீழ், தமிழகத்தில் 117 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வருவார்கள். இது வரவேற்கத்தக்க, வர வேண்டிய மாற்றம் ஆகும்.
* கட்சிகளின் நிலைப்பாடு: இந்தத் திட்டத்திற்கு திமுக, ஆந்திரா மற்றும் சரத்பவார் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சியினர் இதனை வரவேற்கின்றனர்; எதிர்ப்பதற்கு எதுவும் இல்லை. தவெகவும் இதனை ஆதரிக்கும் என நம்புகிறோம். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான அச்சாரமாகவும் இதனைப் பார்க்கிறேன்.
ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதா வந்தபோது வெளிப்படைத்தன்மை, மேற்கு வங்கத் தேர்தல் நேரத்தில் ஏன் அறிவிப்பு மற்றும் மசோதா மீதான நம்பகத்தன்மை ஆகிய மூன்று கருத்துகளை திமுக முன்வைத்தது. ஒன்றிய அரசு தற்போது உரிய விளக்கத்தை அளித்துவிட்டதால், திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது எனக் கருதுகிறேன்.
திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் சட்டம் – ஒழுங்கு
* தீபம் ஏற்றிய பிறகு அங்கு அரசியல் கட்சியினருக்கு எந்த வேலையும் இல்லை. இது அல்வா கொடுப்பது போன்று கொண்டாட வேண்டிய விஷயமல்ல; முருக பக்தர்களுக்கான தீர்ப்பு மட்டுமே.
* முதல்முறையாக ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியை ஒன்றிய அரசு (சி.ஆர்.பி.எப் கட்டுப்பாட்டில் மலை) கையில் எடுத்துள்ளது. இது தவறான முன்னுதாரணம்; ஆளும் கட்சி இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.
* நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியதால் இன்று மாவட்ட ஆட்சியர் மூன்றாவது வரிசையில் சட்டியைக் கையில் ஏந்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வருக்கு விடுத்த கோரிக்கை
ஆட்சியில் ஏழு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், முதல்வர் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த அளவுக்குத் தமிழ்நாடு அரசின் நிலைமையைக் கொண்டு வந்து விட்டுள்ளனர்.
இந்தியாவில் எந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதில்லை. முதல்வர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை என்றாலும், இது தொடர்பாக அறிக்கையாவது வெளியிட வேண்டும். நாகரிக அரசியலுக்காகத்தான் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வருக்கும் வாழ்த்து கூறினேன்; இப்போது முதல்வர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது என்று அண்ணாமலை கூறினார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரைக்குச் சிறப்புப் பூஜை!
