செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு- அதிகாரிகள் அலெர்ட்
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 19.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2530 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 1649 கன அடியாக உள்ளது. தொடர்ந்து கன மழை நீடித்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் 20 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவையும், நீர்மட்ட உயரத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் இன்று அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகு, 19 கண் மதகு ஆகியவற்றை ஆய்வு செய்து உபரி நீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிநீராக மாற்றப்படுகிறது. கடைசியாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது குறித்த பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் செல்லும் வழித்தடங்களை செம்பரம்பாக்கம் ஏரி உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜன் வரைபடங்களை காண்பித்தார்.
