உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மாமன்னன் திரைப்படம்,சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் சொல்லப்பட வேண்டிய, சொல்வதற்கு சற்று சிக்கலான கருத்துக்களை மிகத் தெளிவாக கூறியுள்ளது.
இவ்வாறாக இந்த படம் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் மாமன்னன் திரைப்படத்தை பாராட்டி டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

‘பல்வேறு கட்சிகளில் இருக்கும் சாதிய ஒடுக்கு முறைகளை உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தின் மூலம் களைவதற்கான வேலையை ஆரம்பிப்பார் என நம்பிக்கை கொள்வோம்’ என கூறிய இயக்குனர் பா ரஞ்சித்திற்கு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிவில்,
“மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். `பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி”என்று பதிலளித்துள்ளார்.


