- Advertisement -
கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது- எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக என்பது ஒன்றுதான். பொதுக்குழு தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஏற்றுக்கொள்ளாது. வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுக பலமாகவே உள்ளது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி. 2024 மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும்.


இந்தியாவே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு மதுரை மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றாக உள்ளது மதுரை மாநாடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருசிலரை தவிர்த்து மற்றவர்கள் திரும்பி வந்தால் அதிமுக ஏற்றுக்கொள்ளும். கனகராஜ், ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று சொன்னால் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும்” என்றார்.