கடவுளுக்கே அல்வா கொடுத்த பக்தர்! உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை
ரூ.100 கோடிக்கு காசோலை உண்டியலில் இருப்பதை கண்ட அதிகாரிகள் பணத்தை எடுக்க சென்றால் ரூ.17 மட்டுமே இருப்பு தொகையுடன் இருந்த வங்கி கணக்கை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் சிம்மாச்சலத்தில் அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அவ்வாறு நேற்று உண்டியல் பிரித்து எண்ணும் பணியில் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் ஈடுப்பட்டனர். அப்போது அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் ராதாகிருஷ்ணா என்பவர் பெயரில் ரூ.100 கோடி லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு வழங்கும் விதமாக காசோலை இருந்தது.
இதனை பார்த்த அதிகாரிகள் ஆச்சிரியத்துடன் பார்த்து இது உண்மையாக இருந்தால் கோயில் வளர்ச்சிக்கு பயன் உள்ளதாக இருக்கும் என இந்த காசோலை குறித்து வங்கிக்கு அனுப்பி வைத்து பணத்தை கோயில் வங்கி கணக்கிற்கு மாற்ற சென்றனர். வங்கியில் அந்த காசோலையை பார்த்த வங்கி அதிகாரிகள் அந்த காசோலையின் வங்கி கணக்கை பரிசிலீத்ததில் அது போடேபள்ளி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணா என்ற பெயரில் இருந்த வங்கி கணக்கு என்பதும், அவரது வங்கி கணக்கில் ₹.17 மட்டுமே இருப்பதை உறுதி செய்தனர்.

இதனை கேட்ட கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வங்கி ஊழியர்களிடம் கோயில் நிர்வாகத்தை ஏமாற்றும் வகையில் செய்து கோயில் நிர்வாக பணிகளுக்கு மத்தியில் அலைக்கழிப்பை ராதாகிருஷ்ணனின் முகவரியை தரும்படி கேட்டு பெற்றனர். ராதாகிருஷ்ணன் எனும் பக்தர் வேண்டுமென்றே இவ்வாறு செய்ததாக தெரிய வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.