ஆந்திராவில் நகைக்கடை வியாபாரியை தாக்கி குடும்பத்தினரை கயிற்றால் கட்டிவைத்து ₹ 1 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்.


ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தணுகு நகரில் நரேந்திரா சந்திப்பில் உள்ள தங்க நகை கடை வீதியில் ரேணுகா ஜூவல்லரி என்ற பெயரில் நாம்தேவ் வியாபாரம் செய்து வருகிறார். கடையின் மேல் இரண்டாவது மாடியில் நம்தேவ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செவ்வாய்கிழமை விடுமுறை என்பதால் தங்கநகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் மர்ம நபர்கள் ஐந்து பேர் முகமூடி அணிந்து நேரடியாக நாம்தேவ் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது நம்தேவ், அவரது மனைவி சவிதா மற்றும் மகன் சேத்தன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். ஸ்ரேயா, சைத்ரா, சேதனா ஆகிய மூன்று குழந்தைகள் டியூஷனுக்குச் சென்று இருந்தனர்.
வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் கொண்டு வந்த டேப்பைக் கொண்டு அவர்களின் கால், கைகளையும் கட்டியுள்ளனர். எதிர்த்து போராட முயன்ற நாம்தேவ்வை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த நிலையில் படுக்கையறையில் இருந்த லாக்கரின் பூட்டை எடுத்து, லாக்கரை திறந்து, ஒரு கிலோவுக்கும் அதிகமான அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ₹ 1 லட்சம் பணம் என 15 நிமிடங்களில் அனைத்தையும் எடுத்து கொண்டு காரில் தப்பி சென்றுள்ளனர். சிறிது நேரத்தில், நாம்தேவ் சுதாரித்து கொண்டு அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து தாடேபள்ளிகூடம் டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயுலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் டோல்கேட்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்த கொள்ளையில் ஈடுப்பட்டவர்களில் ஒருவர் நாம்தேவ் நிறுவனத்தில் பணிபுரிந்த சூரஜ்குமார் என சந்தேகம்படும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


