விஜய் அரசியல் பேசுவார் என்பதாலேயே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து- சீமான்
பணி நிரந்தரம், சமய வேலைக்கு சமய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “காவிரி விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். இல்லை என்றால் நான் பாதிப்பை ஏற்படுத்துவேன். இந்தியன் என்ற உணர்வில் தண்ணீர் தர வேண்டும் என்ற அமைச்சர் சொல்கிறார். அப்போ திராவிடர் உணர்வு செத்து போய்விட்டதா? நடிகர் விஜய் அடுத்த ஆண்டு முதல் சினிமாவுக்கு முழுக்கு போடவிருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு விஜய் அரசியல் பேசுவார். விஜய் அரசியல் பேசுவார் என நெருக்கடி கொடுத்துதான் லியோ இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தம்பி விஜய் படத்தின் பாட்டு வெளியிடவிடாமல் தடுக்க வேண்டிய காரணம் என்ன? திமுகவுக்கு என்ன வந்தது? இசை வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவுதான் ரசிகர் வரனும்னு சொல்றீங்க.. நீங்க மாநாடு நடத்தும் போது இவ்வளவுதான் தொண்டர் வரனும்னு சொல்றீங்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
சென்னையில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.


