மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தை தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்குகளில் ஊழியர் சங்கங்கள் கோரிக்கை தொடர்பான TANGEDCO நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் பாதிப்பு, மின்வாரியத்தின் நிதி நிலைமை எதிர்வரும் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொள்ளாமல் இந்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருப்பதாகவும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தொழிற்சங்கங்கள் சட்டத்தின் படி சமரச பேச்சுவார்த்தை துவங்கிய பிறகு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது, என்பதால் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டத்தின் படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்கள்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மின்வாரிய ஊழியர்களின் தங்களுடைய கோரிக்கை தொடர்பாக இன்று காலை பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது என்றும், இது குறித்த அறிவிப்பை கடந்த 5 தேதியே அனுப்பிய போதும் வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டது.


