பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவர். இதை ஒட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து துறை சார்பில் நாளை முதல் 14 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் மூன்று நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

நாளை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 651 பேருந்துகளும் பிற முக்கிய நகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும் இதை போல் நாளை மறுநாள் 13 ஆம் தேதி வழக்கமான பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 1,855 சிறப்பு பேருந்துகளும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 2,214 பேருந்துகளும் 14ஆம் தேதி சென்னையில் இருந்து 1,943 சிறப்பு பேருந்துகளும் மற்ற இடங்களில் இருந்து 2,461 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
சென்னையில் கோயம்பேடு, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி ஆகிய ஆறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்களுக்கு பயணிகள் செல்ல ஏதுவாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 24 மணி நேரமும் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 12 முன்பதிவு மையங்களிலும் tnstc செயலி மற்றும் www.tnstc.in என்ற இணையதளம் ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்களை தெரிவிக்க 1800 425 6151, 044 – 2474 9002, 044 – 2628 0445, 044 – 2628 1611 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு உதவ 20 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்புப்பட்டத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


