
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று (டிச.03) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

மிக்ஜம் புயல் எதிரொலி… தற்காலிகமாக மூடப்படும் சென்னை விமான நிலையம்!
மழையால் வெள்ளப் பாதிப்பு உள்ள தாம்பரம், வேளச்சேரி பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு சென்றது. 25 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு தாம்பரம், வேளச்சேரி பகுதிகளில் வெள்ள மீட்புப் பணி மேற்கொள்கிறது. மேலும், கூடுதலாக பேரிடர் மீட்புப் படையினர் தாம்பரம், வேளச்சேரி பகுதிக்கு விரைகின்றனர்.
இதனிடையே, வேளச்சேரியில் குடியிருப்புக் கட்டடம் மண்ணுக்குள் இறங்கியதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், கனமழை காரணமாக, மீட்புப் பணிகளை தொடர்வது சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை நீடிக்கும் நிலையில், சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 8,881 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏரியில் இருந்து வினாடிக்கு 3,162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.