spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் - மீனவரின் உடல் உடற்கூறு ஆய்வு

கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் – மீனவரின் உடல் உடற்கூறு ஆய்வு

-

- Advertisement -

கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் – சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர் ராஜாவின் உடலை மருத்துவர் கோகுல ரமணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய தொடங்கினர்.

we-r-hiring

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்துள்ள கோவிந்தபாடியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா, கடந்த 14ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக தனது நண்பர்கள் இளையபெருமாள் மற்றும் ரவி ஆகியோருடன் தமிழக, கர்நாடக எல்லையான பாலாறு பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு பாலாற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள், பாலாற்றின் மற்றொரு கரையான கர்நாடக எல்லை வனப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மீன்பிடிக்க சென்றவர்களை பார்த்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் இளையபெருமாள் மற்றும் ரவி ஆகியோர் தப்பிவிட்டனர். ராஜா காணாமல் போயிருந்த நிலையில், நேற்று காலை பாலாற்றில் தமிழக எல்லைப் பகுதியில் ராஜாவின் உடன் தண்ணீரில் சடலமாக மிதந்தது.

இதனை அறிந்த ராஜாவின் உறவினர்கள் மற்றும் கோவிந்தப்பாடி, செட்டிபட்டி காரைக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் திடீரென தமிழக எல்லையான பாலாற்று பகுதியில் திரண்டனர். அதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது.  இதனை எடுத்து ராஜாவின் உடல் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜாவை கர்நாடக வனத்துறையினர் சுட்டுவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட வனத்துறையினரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக எல்லையில் மீனவர் ராஜாவை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறையினருக்கு கண்டனம் தெரிவித்ததோடு மீனவர் ராஜாவின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று காலை மேட்டூர் நீர்வளத்துறை ஆய்வு மாளிகையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உறவினர்கள் ராஜாவின் உடலை பெற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர். அதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய இருந்த நிலையில், திடீரென மீண்டும் உறவினர்கள் பின் வாங்கி உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

கர்நாடக அரசு துப்பாக்கி சூடு குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, பாதிக்கப்பட்டவருக்கு கர்நாடக அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். அப்போது தான் உடலை பெறுவோம் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முன்னிலையில் மீனவர் ராஜாவின் மனைவி பவுனா, தாய் கண்ணம்மா மற்றும் அவருடைய சகோதரர்கள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கோரிக்கை வைத்தனர். கர்நாடகா அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கர்நாடக மாநில சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது மீனவர் ராஜாவின் உறவினர்கள் நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வனத்துறையர் மீது நடவடிக்கை எடுக்க கூறியதாகவும் அவரிடம் தெரிவித்தார். அப்போது அவர் இது குறித்து தலைமைச் செயலாளரிடம் தெரிவித்துவிட்டு கூறிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ராஜாவின் உறவினர்களிடமும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் பாமக வினரிடம் தெரிவித்தார்.

மேலும் பாலாற்றில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரைக்காடு பகுதியில் தமிழக எல்லைக்கான சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக எல்லையில் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட்டு அவர்களை தமிழக எல்லை பகுதியில் வீசி சென்று விடுகின்றனர். எனவே பாலாற்றில் தமிழக சோதனை சாவடி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கும் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தார். இதனை எடுத்து உடலை பெற்றுக் கொள்வதாக மீனவர் ராஜாவின் உறவினர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, மீனவர் ராஜாவின் உடற்கூறு ஆய்வு தொடங்கியது.

பிரேத பரிசோதனை துறை தலைவர் கோகுலராமணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் மீனவர் ராஜாவின் உடல் முழுவதும் எக்ஸ்ரே மெசின் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது.

உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் உறவனிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த கிராமத்தில் ராஜாவின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ