தெலங்கனா மாநிலத்தில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் குபீர் மண்டலம் பார்டி(கே) கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவரது மகன் திருமணம் பைன்சா மண்டலம் கமோல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பார்டி(கே)யில் சனிக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு மாவட்டம் சிவானி கிராமத்தை சேர்ந்த மணமகனின் நெருங்கிய உறவினரும் நண்பருமான முத்யம் (19) பங்கேற்றார். அப்போது சினிமா பாடலுக்கு முத்யம் நடனமாடி கொண்டு இருந்தார்.
இந்நிலையில் திடீரென முத்யம் மயங்கி சுருண்டு விழுந்தார். அதனை கவனித்த அப்பகுதியினர் அந்த இளைஞனை எழுப்ப முயன்றும் எந்தவித அசைவும் இல்லாத நிலையில் அவசர சிகிச்சைக்காக பாய்ம்சா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முத்யம் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் திருமண வீட்டார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


