பங்களாதேஷின் பதவி நீக்கப்பட்ட பிரதமரும், நாட்டின் மிகப்பெரிய கட்சியான அவாமி லீக்கின் தலைவருமான ஷேக் ஹசீனா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் ஷேக் ஹசீனா தன்னை வங்கதேசத்தின் பிரதமராக காட்டியுள்ளார்.
இது வங்கதேசத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவாமி லீக் அலுவலகச் செயலாளரால் கையெழுத்திடப்பட்ட இந்தக் கடிதத்தில், ‘வங்காளதேசத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா, டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப்புடனான அவரது சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை அன்புடன் நினைவு கூர்ந்துள்ளார். ‘இரு நாடுகளின் இருதரப்பு மற்றும் பலதரப்பு நலன்களை முன்னேற்ற மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான பெரும் போராட்டத்துக்குப் பிறகு, ஷேக் ஹசீனா இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
ஷேக் ஹசீனா, டொனால்ட் டிரம்பிற்கு தனது வாழ்த்துச் செய்தியில் தன்னைப் பிரதமர் என்று குறிப்பிட்டதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஷேக் ஹசீனாவை இந்தியா முன்னாள் பிரதமராக கருதுவதாகவும், இது குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா வங்காளதேசத்தில் இருந்து தன்னை நீக்கியதன் பின்னணியில் தற்போதைய ஜோ பிடன் நிர்வாகம் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அவரது மகன் சஜீப் வாஜித் அந்த அறிக்கையை நிராகரித்தார். ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோதும், தனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.