தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கும் சரியாக ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளும் கூட்டணி முடிவுகள், தேர்தல் வியூகங்கள் அமைக்க தயாராகி வருகின்றன.ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்னும் இமாலய இலக்கை நிர்ணயித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் வெற்றி கூட்டணியாக இருக்கும் திமுக தலைமையிலான கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் என்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து எதிர்க்கட்சிகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் இதே கூட்டணி தொடருமா, தொடரும் பட்சத்தில் மீண்டும் வெற்றியை தக்க வைப்பார்களா அல்லது கூட்டணியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதே இப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சுற்றி நடக்கும் அரசியல் கணக்காக இருந்து வருகிறது.
அடுத்ததாக தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டமாக மாறியிருக்கிறது. கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கும் கட்சி தலைமையின் மீதான அதிருப்தி, பாஜகவுடன் கூட்டணி குறித்த இறுதி முடிவு என்று அதிமுகவை சுற்றி பல சர்ச்சை கேள்விகள் ரீங்காரமிட்டு வருகிறது. இவற்றை சமாளித்து சாதிப்பாரா அல்லது எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சறுக்குவாரா என்பதே இப்போதைய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
மூன்றாவதாக, பாஜக. தமிழ்நாட்டில் தாங்கள் வளர்ந்துவருவதாக தொடர்ந்து சொல்லி வரும் பாஜக அதை நிரூபிக்க இத்தேர்தலின் வெற்றியை அவசியமாக பார்க்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளில் இமாலய வளர்ச்சி அடைந்திருக்கும் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு படி கூட முன்னேறாதது தலைமைக்கு தொடர்ந்து தலைவலியை கொடுத்து வருகிறது. வெற்றியை வசப்படுத்த அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களா அல்லது தங்கள் தலைமையில் மூன்றாவதாக ஒரு அணி அமைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அடுத்ததாக நாம் தமிழர் கட்சி. தமிழ்தேசியத்தை உயிர்நாடியாக வலியுறுத்தும் நாம் தமிழர் கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து தான் போட்டி என்ற கொள்கையிலும் உறுதியாக இருக்கிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வருகையால் பெரியளவு இளைஞர் பட்டாள ஆதரவை சீமான் இழந்துவிடுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் வாக்கு சதவீதமே நாம் தமிழரின் வளர்ச்சியை காட்டும் அளவுகோலாக இருக்க போகிறது.
அடுத்ததாக, தமிழக அரசியல் களத்திற்கு புதுவருகை கொடுத்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம். கட்சி தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும் பெரியளவில் பொதுவெளி அரசியலில் ஈடுபடாதது அக்கட்சியின் தலைவர் விஜய் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனமாக இருந்து வருகிறது. விமர்சனங்களை உடைத்தெறிந்து தனக்கென தனி இடம் பிடிக்குமா தமிழக வெற்றிக் கழகம் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றைய சூழலில் தேர்தலுக்கான போட்டியில் திராவிட முன்னேற்ற கழகமே முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் மீண்டும் ஒரு முறை ஆட்சி பொறுப்பேற்க போவது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்றும் சொல்லப்படுகிறது.
2026 தேர்தல்; புதிய வியூகத்தில் பாஜக ! இலக்கு நிர்ணயித்து களமாடும் திமுக; வேடிக்கை பார்க்கும் அதிமுக