கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை நேரில் பார்வையிடுகிறார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 245க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று வயநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் அங்கு தொடர் மழை பெய்ததாலும், மோசமான வானிலை நிலவியதாலும், பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டட் பகுதிகளை ராகுல்காந்தி நாளை பார்வையிட உள்ளார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர்.பகல் 12.30 மணிக்கு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் ராகுல்காந்தி, பின்னர் மேப்பாடி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்துத் ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து, மேப்பாடி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.