சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, சவரன் ரூ.78,000 தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே மெல்ல மெல்ல அதிகரித்து நாளுக்கு நாள் புதிய உச்சத்தை வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் 27ம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.75,000 தாண்டிய நிலையில், கடந்த ஆக.29ம் தேதி சவரன் ரூ. 76,000ஐ தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.77,800 என்கிற உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 9,725க்கு விற்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,805க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலையேற்றம் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள், நடுத்தர வர்க்கத்தினரை கலக்கமடையச் செய்துள்ளது.

தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.10,000 தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137க்கும் , ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1.37 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.