spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? - குரு மித்ரேஷிவா

“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? – குரு மித்ரேஷிவா

-

- Advertisement -

குரு மித்ரேஷிவா“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? - குரு மித்ரேஷிவா குரு மித்ரேஷிவா கேள்வி:குரு, ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். ஆனாலும், பணக்காரன் ஆக முடியவில்லையே?

வாழ்த்துக்கள் சார். நீங்கள் கஷ்டப்படுவதற்கு என்றே நேர்ந்துவிடப்பட்டிருக்கிறீர்கள் அடி வாங்கி, அடி வாங்கி பழகிய பாரம் இழுக்கும் மாடு அடியைக்கூட ஒருவகை பாராட்டு என்று கருதிக்கொள்ளுமாம். நீங்கள் அவ்வகை ஆள்.

we-r-hiring

சிறுவயதிலிருந்து உங்களுக்குள் ஒரு நம்பிக்கையை வளர்த்திருப்பார்கள். கஷ்டபட்டு படிக்க வேண்டும். கஷ்டப்பட்டு வேலை பார்க்க வேண்டும். கஷ்டப்பட்டு கல்லூரிக்குப் போக வேண்டும். கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டும். கஷ்டப்பட்டு கல்யாணம் செய்ய வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டும். கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். கஷ்டப்பட்டால்தான் முன்னேற முடியும். இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். வாழ்க்கை என்றாலே கஷ்டம் என்ற தவறான சிந்தனை முறைக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்.

அதனால்,‘கஷ்டம்’ என்ற வார்த்தையே உங்கள் வாழ்க்கை என்றாகிவிட்டது.

இதுவொரு தவறான அணுகுமுறை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உண்மையில், கஷ்டப்பட்டு எதையும் சாதிக்க முடியாது. கஷ்டப்பட்டு சாதிக்க நினைத்தால் களைப்புதான் மிஞ்சும் சாதனையாளர் ஆக முடியாது.

நம் சமுதாயம் எல்லாவற்றிற்கும் கஷ்டப்படச் சொல்லியே நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறது. உங்கள் தினசரி வாழ்விலேயே, ‘கஷ்டப்பட்டு உழைத்த காசுதான் தங்கும், கஷ்டப்படாமல் வந்த காசு காற்றில் போய்விடும்’ எனச் சாதாரணமாக அனைவரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

இந்தத் தவறான சிந்தனைப் பழக்கம் உங்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அது வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் பிரதிபலிக்கிறது. பண விஷயத்தில் கஷ்டப்பட்டுதான் சம்பாதிக்க வேண்டும் என்று மனதில் நீங்கள் தீர்மானித்து வைத்திருக்கிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய குறைபாடு.

“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? - குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

உண்மை என்னவென்றால் கஷ்டப்படாமல்தான் பணம் வரும். கஷ்டப்பட்டால் பணம் வராது. மிகவும் கஷ்டப்பட்டால் கொஞ்சமாக பணம் வரும். அதுவும்கூட போனால் போகட்டும் என்று பிரபஞ்சம் நமக்கு அளிக்கக்கூடிய சலுகையாக இருக்கும். அதுவே, கஷ்டப்படாமல் செய்தால் நிறைய பணம் வரும். எப்படி?பொதுவாகவே, விரும்பிச் செய்யவேண்டிய எந்தவொரு செயலையும் விரும்பிச் செய் என்று நமக்கு யாரும் சொல்லித்தரவில்லை.

பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற, கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். வேலைக்குச் சென்றால் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் தொழிலில் முன்னேற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். இப்படித்தான் சொல்லித்தரப்பட்டிருக்கின்றதே தவிர, விருப்பத்தோடு வேலை செய், விரும்பியதைச் செய், குதூகலமாகப் படி என்று சொல்லித்தரவில்லை.

எந்தவொரு வேலையாக இருந்தாலும் எளிதாகச் செய்யலாம். ஆனால், அதை நீங்கள் விரும்பிச் செய்யவேண்டும். அத்துடன் அந்தச் செயல், அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலனை மட்டும் நோக்கியதாகவும் இருக்கக் கூடாது.

நம்முடைய முக்கியமான பிரச்சினைகள் இரண்டு.

ஒன்று, கஷ்டப்பட்டுத்தான் எதையும் அடைய வேண்டும் என்கிற எண்ணம். இரண்டு, செய்யக்கூடிய செயல் அனைத்திலும் பலனை எதிர்பார்ப்பது.

இந்த இரு காரணங்களால்தான் உங்களுக்கு செல்வம் எளிதாக வருவதில்லை. எந்தக் கஷ்டமும் இல்லாமல் இயல்பாகச் செயல்படுபவர்களிடம் இந்த இரண்டுமே இருக்காது. அவர்களுக்கு செல்வம் எளிதாக வந்து கொண்டிருக்கும்.

அப்படி எளிதாக செல்வம் வருவதற்கு என்ன காரணம்?

இறைவன் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு நோக்கத்தை வைத்துதான் படைத்திருக்கிறார். எந்த நோக்கதிற்காக ஓர் உயிர் படைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த நோக்கத்துடன் ஒத்திசைந்து, இதற்காகத்தான் நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்துவிட்டால் எல்லாமே எளிதாகிவிடும்.

அதற்கு உண்டான சூத்திரம், சக்தி, சூட்சுமம் எல்லாவற்றையுமே இறைவன் ஒவ்வொரு உயிருக்குள்ளும் வைத்துத்தான் படைத்திருக்கிறான். இதைச் சரியாக உணர்ந்துவிட்டீர்கள் என்றால் எதையுமே சிரமமின்றி எளிதாகச் செய்யலாம். ஏனென்றால், எதை உங்களால் எளிதாக இயல்பாகச் செய்ய முடிகிறதோ அதற்காகத்தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் எதைச் செய்யும்போது இடம் மறந்து, பொருள் மறந்து, நேரம் மறந்து பசி துறந்து, உங்கள் முழு ஆற்றலையும் குவித்து ஒன்றில் லயித்து ஈடுபட்டுச் செய்கிறீர்களோ அதுதான் உங்கள் சுதர்மம்.

அதைச் செய்யத்தான் இயற்கை உங்களைப் படைத்திருக்கிறது. நீங்கள் விரும்பியதைச் செய்கையில்மிக மிக எளிதாக எவ்வித கஷ்டமும் படாமல் செல்வத்தைப் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சம் வெகு இயல்பாக இயங்கக்கூடியது. இயற்கையில் எதுவும் ‘கஷ்டப்பட்டு நடப்பதில்லை.

உதாரணமாக, ஒரு மாங்கொட்டையை எதற்காக இறைவன் படைத்திருக்கிறார். மாங்காயை உருவாக்குவதற்காக. ஒரு மாங்காயை உருவாக்குவதற்கான சூத்திரங்கள் அந்த மாங்கொட்டையில் இருக்கிறது.

மாங்கொட் டையை மண்ணில் விதைத்து தண்ணீர் ஊற்றி வளர்க்கும்போது, அழகான மாமரம் வளர்ந்து சுவையான மாங்காயைத் தருகிறது. அதுபோல, ஒரு வேப்பங்கொட்டையில் வேப்பமரத்திற்கான சூத்திரம் இருக்கும்.

‘என் பழத்தை யாருமே விரும்பிச் சாப்பிடுவதில்லை. அதனால், இனிமேல் நான் கஷ்டப்பட்டு மாம்பழத்தை உருவாக்கப் போகிறேன்’ என்று வேப்பமரம் நினைத் தால் எப்படியிருக்கும்?

அப்படித்தான் இருக்கிறது இங்கு பலரின் செயல்பாடுகள். நாம் எதற்கு படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை உணராமல், யாரோ எதுவோ செய்கிறார்கள் என்று நாமும் செய்து அடிபட்டு அவஸ்தைப்படுகிறோம்.

ஒரு வேப்பமரம் மாம்பழத்தை எப்படி உருவாக்க முடியும்? எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நடக்காது. அடிப்படையில் அதற்கான மூலப்பொருளோ, சூத்திரமோ அதில் இல்லை. மாம்பழத்தை உருவாக்குவதற்காக வேப்பமரம் படைக்கப்படவில்லை. அதன் நோக்கம் அது கிடை யாது.

அதுவே ஒரு மாமரம் வெகு எளிதாக, இயல்பாக மாம்பழத்தை உருவாக்கிவிடும். எந்தக் கஷ்டமும் படாது. ஆனால், மாமரம் தேங்காயை உருவாக்க நினைத்தால்? முடியுமா? இதுதான் இயற்கையின் ரகசியம்.

இயற்கையைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். எல்லா விஷயமும் இயல்பாக எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் தானாகவே நடக்கின்றன.

ஒரு ரோஜாச் செடியை உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்க வேண்டும் என்றால் என்னவெல்லாம் கஷ்டப்படுவீர்கள். சரியான மண் வேண்டும். அளவான உரம் வேண்டும், வெயில் அதிகம் இருந்தால் செடி கருகிவிடும், குறைவாக இருந்தால் செடி வளராது. மிதமான சரியான சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்க வேண்டும். முறை வைத்து தண்ணீர் விடவேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தாலும் பூ மட்டும் பூக்கவே மாட்டேன் என்கிறது. அப்படியே பூத்தாலும் அதன் இயல்பான அளவில் பாதிதான் இருக்கும். எவ்வளவு கஷ்டபட்டாலும் ஒரு ரோஜாச் செடியை பூக்க வைக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவீர்கள்.

ஊட்டி, கொடைக்கானல் என்று மலைப்பிரதேசங்களுக்குப் போனால் தெருவோரங்களில் காட்டுச்செடி போல ரோஜாக்கள் பூத்து நிறைந்து கிடக்கும். அதைப் பராமரித்து நேரம் பார்த்து தண்ணீர் விட்டு உரம் வைத்தா வளர்க்கிறார்கள்? இல்லை, தானாக வளரும். காரணம் என்னவென்றால் ரோஜா வளர்வதற்கான சூழ்நிலை அங்கு இயல்பாகவே இருக்கிறது.

எப்போது ஒரு சரியான சூழ்நிலை உருவாகி அதற்கு உண்டான மூலம் சரியாக இயற்கையுடன் ஒத்திசைகிறதோ அப்போது அதன் படைப்பு மிகவும் எளிமையாக வும் இனிமையாகவும் இருக்கும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் ஒரு குறிப்பிட்ட சக்தியை, ஒரு சூத்திரத்தை வைத்திருக்கிறான். ஆனால், அந்தச் சூத்திரத்தை நீங்கள் பார்க்காததுதான் பிரச்சினை உங்களுக்கான சூத்திரத்தை விட்டுவிட்டு ஆட்டுமந்தை போல எல்லாரும் ஒரே வேலையைச் செய்ய முற்படுவதனால் எல்லாமே கஷ்டமாகிவிடுகிறது.

மாம்பழம் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்பதற்காக காட்டில் இருக்கும் அத்தனை மரங்களும் மாம்பழத்தை உற்பத்தி செய்ய நினைத்தால் எப்படியிருக்கும்? மாமரம் மட்டும்தான் மாங்காயை உற்பத்தி செய்யமுடியும். மற்ற மரங்கள் எல்லாம் அதனதன் வேலைகளைத்தான் செய்யமுடியும். அதைத்தான் செய்கின்றன.

“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? - குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

ஒரு சமுதாயத்தில் லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறோம். அனைவரும் ஒரே வேலையைச் செய்ய முற்பட் டால் என்ன நடக்கும்? இப்படித்தான் கஷ்டத்தில் சிக்கிக்கொள்கிறீர்கள். மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுக்கொண்டு உங்களை நீங்களே வருத்திக்கொள்வது வேப்பமரம் மாம்பழம் உருவாக்க நினைத்த கதைதான்.

அப்படியென்றால் நான் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறேன்?. என்னுடைய வேலையை, தொழிலை நான் பின்தொடர்ந்தால் எனக்கு வருமானம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுகிறதல்லவா?

எதுவுமே ஒரு நாளில் நடந்துவிடாது. அதற்கான இயல்பான நேரம் வரும்போது தானாக நடக்கும். ஒரு விதையை மண்ணில் விதைத்தால் உடனே முளைத்து மரமாகி மாம்பழம் தந்துவிடுகிறதா? இல்லையே. விதையை விதைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி, அது வளர்ந்து மரமாகி பழம் தருவதற்கு சில வருடங்கள் ஆகும் இல்லையா?

பொறுமையும் நிதானமும் விடாமுயற்சியும் இருக்க வேண்டும். முதலில் உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். நம்பிக்கை எப்போது ஏற்படும்? உங்கள் திறனை நீங்களே கண்டுகொள்ளும்போதும் அதை வளர்த்தெடுக்கும்போதும் உருவாகும்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ் வொரு உயிருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது அதை இயக்கும் ஒரு பிராண சக்தி இருக்கிறது. அந்தப் பிராண சக்திதான் அனைத்து செல்வங்களையும் சம்பாதித்துக் கொடுக்கிறது. இந்தப் பிராண சக்தியின் ஓட்டம் யாருக்கு நன்றாக இருக்கிறதோ அவருக்குத்தான் செல்வம் எளிதாகக் கிடைக்கிறது.

எல்லாருக்குள்ளும் இந்த பிராண சக்தி இருக்கிறதா என்று கேட்கிறீர்களா?ஆம், கண்டிப்பாக இந்தப் பூமியில் பிறக்கும் அத்தனை உயிருக்குள்ளும் இந்தப் பிராண சக்தி இருக்கிறது.

அப்படியென்றால் ஏன் எல்லாரும் செல்வந்தர்களாக இல்லை? அவர்களுடைய பிராண சக்தியின் ஓட்டம் தடை செய்யப்பட்டிருப்பதுதான் அதற்குக் காரணம்.

உங்களுக்குப் புரியும்படி எளிதாகச் சொல்கிறேன். முன்பே கூறியது போல ஒவ்வொரு உயிரும் ஒரு காரணத்திற்க்காக படைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து, அதில் உங்களுடைய உயிர்த் தன்மையைச் செலுத்தி, ஒரு காரியத்தைச் செய்யும் போது பிராண சக்தி தடையின்றி ஓடும். ஆனால், காரணத்தை விட்டுவிட்டு வேறு செயல்களில் நீங்கள் ஈடுப்டும்போது சக்தியோட்டம் தடைபட்டுவிடும்.

படைக்கப்பட்ட காரணத்திற்காக ஒருவர் ஒரு செய்லைச் செய்யும்போது இந்த சக்தியோட்டம் முழுவீச்சில் இயங்குகிறது. அப்படி இயங்கும்போது அதனுடைய உச்சத்தை நீங்கள் அடைய முடியும் அதுவே அனைத்து செல்வங்களையும் கொண்டுவந்து கொடுக்கும். உங்கள் பிராண சக்தி முழு வீச்சில் செயல் படும்போது செல்வத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை. செய்யவேண்டியதெல்லாம் இயல்பாக, சந்தோசமாக உங்கள் படைப்பின் காரணமான காரியத்தை செய்யவேண்டியது மட்டும்தான்.

உதாரணமாக, உங்களிடம் ஒரு பாட்டுக்கு இசைய மைக்கச் சொன்னால் உங்களால் முடியுமா? படாத பாடு பட்டாலும் முடியாது. ஆனால், இளையராஜாவிடமோ ரஹ்மானிடமோ சொன்னால் ஐந்தே நிமிடத்தில் செய்து முடித்து கையில் தந்துவிடுவார்கள். ஏன் ஏன்றால் அந்த உயிர் அதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. அவ்வுயிரின் பிராண சக்தி தங்குதடையின்றி ஓடுகிறது.

ரஹ்மானிடம் கிரிக்கெட் விளையாடச் சொன்னால் அவரால் முடியுமா? அதே சச்சின் டெண்டுல்கரிடம் கிரிக்கெட் பேட்டைக் கொடுத்தால் போதும் அநாயாசமாக சதம் அடிப்பார். சச்சின் டெண்டுல்கரிடம் ஒரு கஜல் பாடலை உருக்கச் சொல்லுங்களேன். பேட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்.

சச்சினுக்கு கிரிக்கெட் பேட் எடுக்கும்போதுதான் பிராண சக்தி முழு வீச்சில் செயல்படும். சச்சினை பாட் டுப் பாடச் சொன்னால் பிராண சக்தி ஓட்டம் இருக்காது. இளையராஜாவிற்கும் ரஹ்மானிற்கும் இசையமைக்கும் போதுதான் பிராண சக்தி முழு வீச்சில் செயல்படும்.

அடுத்து, பலனை மட்டுமே எதிர்பார்த்து செயல்களைச் செய்வது. அதாவது ஒன்றைச் செய்வதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்ற நோக்கத்துடன் செயல்படுவது. அப்படிச் செய்யும்போது செயல்திறனைத் தொலைத்துவிடுகிறீர்கள். கீதையின் மூலம் கிருஷ்ணர் இந்த உலகிற்குச் சொன்னது இதைத்தான். ‘கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே’. நமக்கு என்ன கிடைக்கிறது என்று எதிர் பார்க்காமல், நாம் என்ன கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

தினமும் சூரியன் உதிக்கிறது. உலக மக்களுக்கு வெளிச்சம் கொடுத்தால் எனக்கு ஏதாவது திரும்பக் கிடக்கும் என்று பலனை எதிர்பார்த்தா சூரியன் உதிக்கிறது? அது தன் கடமையைச் செய்கிறது.

மாம்பழம் கொடுப்பதில்தான் மாமரம் கவனமாக இருக்கிறது. நான் உனக்கு மாம்பழம் கொடுத்தால் நீ எனக்கு தண்ணீர் தருவாயா, உரம் தருவாயா என்றா கேட்கிறது?

“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? - குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

ஒரு செயலைச் செய்யும்போது இதற்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன். இந்தச் செயலை நான் சிறப்பாகச் செய்து கொடுக்க வேண்டும் என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும்.  “One should always focus on the process not on the end result”.

அப்படியில்லாமல் உங்கள் கவனம் கிடைக்ககூடிய பலனில் இருக்கும்போது உங்கள் செயல்திறனை, ஸ்டைலை,கலைநயத்தை இழந்துவிடுகிறீர்கள். அதனால், அனைத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.

உங்கள் கவனம் செய்யக்கூடிய செயலில் இருக்கவேண்டும். அதை நோக்கிய படிநிலைகளில் கவனம் இருக்கவேண்டும். செயலின் பிரதிபலனில் இருக்கக்கூடாது. கைம்மாறு வேண்டாகடப்பாடு என்பது அதுதான்.

முதலில் கஷ்டப்பட்டுதான் எதையும் அடைய முடியும் என்கிற முன்தீர்மானத்தைக் கைவிட வேண்டும். உங்கள் படைப்பின் காரணத்தை அறிந்து, அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். அப்போதும்கூட கிடைக்கக்கூடிய பலனை எதிர்பார்க்காமல், செய்யும் செயலில் கவனமாக இருக்கவேண்டும்.

அப்போது எந்த வேலையும் செயலும் உங்களுக்குக் கஷ்டமாகத் தெரியாது. நீங்கள் ஒரு விற்பனைப் பிரதிநிதி என்று வையுங்கள். அன்று நீங்கள் சந்தித்தாக வேண்டியவர்களை எல்லாம் சந்தித்து. நிறுவனத் தயாரிப்புகளுக்கு நேரடி டெமோ காட்டிவிட்டு. மேலாளருக்கு அறிக்கையும் தாக்கல் செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்புகிறீர்கள். நேரமோ இரவு ஏழு மணி. உங்கள் மேலாளர் திரும்ப அழைத்து, ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு வாடிக்கையாளரைச் சந்திக்கச் சொல்கிறார்.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? மேலாளருக்குப் பதில் உங்கள் காதலி அழைக்கிறார். பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறேன். வா, இரவுக் காட்சி சினிமாவிற்குப் போகலாம் என்கிறார். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? முன்னது கஷ்டம், பின்னது இஷ்டம்

கஷ்டப்பட்டு ஒன்றைச் செய்வதாகச் சொன்னாலே அங்கே ஒரு எதிர்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். அது உங்களுக்கானது இல்லை. அதற்காக நீங்கள் படைக் கப்படவில்லை என்று எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அது போன்ற செயல்களால் செல்வம் கிடைக்காது களைப்புதான் வரும்.

உங்கள் வேலையையோ அல்லது தொழிலையோ தேர்ந்தெடுக்கும்போது பாதுகாப்பு அல்லது நிலையான வருமானம் என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் செல்வம் எப்படி எளிதாக வரும்?

நீங்கள் பணம் இருந்தால்தான் பாதுகாப்பு என்ற எண்ணத்தில் பணத்திற்குப் பின்னால் ஓடுகிறீர்கள். பணம், பணம் என்று செல்லும்போது அது இல்லையென்றால் பயத்தை உருவாக்குகிறது.

பாதுகாப்பிற்குப் பின்னால் செல்லாமல் உண்மையை நோக்கிச் செல்லுங்கள். அது அனைத்தையும் எளிதா கக் கொண்டுவந்து சேர்க்கும்.“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? - குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

மூளை சொல்வதைக் கேட்காதீர்கள். இதயத்தைக் கேளுங்கள். இதயம் ஒருபோதும் தவறான பாதைக்குக் கொண்டு செல்லாது.

இந்த மண்ணில் பிறக்கும் அத்தனை உயிரும் பொக்கிஷங்கள்தான். உயிர்களில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. இயற்கையின் படைப்புகள் அத்தனையும் ஒரு காரணத்திற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் வைரங்கள்தான்.

ஆனால், நீங்கள் வைரம் என்பது உங்களுக்குத் தெரியவில்லை ஆகவே, ஒரு பாறைக்கல்லைப் போல சம்மட்டி அடியைத் தாங்கிக்கொள்கிறீர்கள். அதை நீங்கள் கண்டுபிடித்துச் செயல்படவேண்டும்.

எப்படி என் படைப்பின் நோக்கத்தை நான் கண்டுபிடிப்பது?

அதற்குப் பல சூட்சுமங்கள் இருக்கின்றன. முதலில் உங் களை உள்ளே ஆழ்ந்து பார்க்கவேண்டும். உங்களுக் குள்ளேயே அதை அறியும் சக்தி இருக்கிறது. அதைச் சரியாகக் கண்டுபிடித்து சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை மட்டும் தெரிந்து கொண்டீர்கள் என்றால் எந்தக் கஷ்டமும் படாமல் எளி தாக செல்வத்தைப் பெறலாம். அதுவே உங்களைத் தேடி வரும்.

“பண வாசம்”- மதிப்புக் கூட்டப்பட்ட பணம் – குரு மித்ரேஷிவா

MUST READ