குரு மித்ரேஷிவா

ஒருநாள் பழனிச்சாமியின் மகன் பள்ளிக்கூட பஸ்ஸை தவறவிட்டுவிட்டு அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தான். உடனே பழனிசாமி மகனை அழைத்துக்கொண்டு சென்று ஸ்கூல் வாசலில் இறக்கிவிட்டார்.

“அப்பா இங்க ஏம்பா வந்த?” என்றான் மகன்.
பழனிச்சாமிக்கு கோபம் தலைக்கேறியது. “என்னடா விளையாடுறியா… நீதானடா டீச்சர் திட்டுவாங்க… இப் பவே ஸ்கூல்ல கொண்டுவந்து விடுங்கன்னு அழுத” என்றார்.
சிறுவன் அழுதுகொண்டே, “ஆனால், இது என் ஸ்கூல் இல்லப்பா” என்றான்.
பழனிச்சாமிக்கு ஒன்றும் புரியவில்லை. தாமதமாக வந் துவிட்டதால் பள்ளிக்கூடம் போகாமல் இருக்க சாக்குச் சொல்கிறான் என்று நினைத்து மகனை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்ப முயன்றார். “அழாத நான் டீச் சர்கிட்ட சொல்றேன் அடிக்கமாட்டாங்க” என்றார்.
சிறுவன் அழுதுகொண்டே,”இது என் ஸ்கூல் இல் லப்பா” என்றான் மறுபடியும்.
“என்னடா உளர்ற… நான்தான அலைஞ்சு திரிஞ்சு சிபாரிசுக்கு ஆள் புடிச்சு… கால் வலிக்க காத்துக் கிடந்து அட்மிசன் வாங்கி உன்னை இங்கே இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டேன்” என்றார் கோபமாக.
சிறுவன் கண்ணைத் துடைத்துக்கொண்டு,”அது நாலு வருசத்துக்கு முன்னாடிப்பா… இப்போ நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். அம்மா ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே ஸ்கூல் மாத்திட்டாங்க என் ஸ்கூல் காந்திபுரம் பக்கத்தில இருக்கு” என்றான் பரிதாபமாக. இங்கு பலரின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. எதற்கு சம்பாதிக்கிறோம் என்ற அடிப்படைக் காரணத்தையே மறந்துவிட்டு பணம் சம்பாதிக்க ஓடிகொண்டே இருக்கிறார்கள்.
நிறைய பணம் வருகிறது. நிறைய தொழில் செய்கிறேன், ஓடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால், திரும்பிப் பார்த்தால் காலம் போய்விட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று புலம்புகிறார்கள்.
காலை எட்டு மணிக்கு கடைக்குச் சென்றால் இரவு பதினோரு மணிக்குதான் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரங்கள் வேலை செய்கிறார்கள். மாதம் ஒரு பத்து லட்சமோ பதினைந்து லட் சமோ சம்பாதிக்கிறார்கள். ஒரு கடையில் இவ்வளவு வருமானம் வருகிறது என்று தெரிந்தவுடன், இன்னொரு கடை திறந்தால் என்னவென்று அடுத்தக் கடையைத் திறப்பார்கள். அதன் பிறகு மற்றொன்று, அடுத்து இன்னொன்று இப்படி ஐம்பது நூறு என்று கடைகள் திறந்து கொண்டே இருப்பார்கள்.
பத்து மணிநேர உழைப்பு பதினைந்து மணிநேரமாக அதிகரிக்கும். பிறகு பதினெட்டு மணி நேரம் ஆகும். அதன் பிறகு தூக்கம் இல்லாமல் விடிய விடிய ஓட வேண்டியிருக்கும்.
பதினைந்து லட்சம் சம்பாதித்துக் கொண்டிருந்தால், அறுபது லட்சம் சம்பாதிக்க ஓடுவார்கள். பிறகு, எண்பது லட்சம் சம்பாதிக்க ஓடுகிறார்கள். இது என்ன பைத்தி யக்காரத்தனம்? முதலில் இந்தப் பதினைந்து லட்சத்தை எப்படி அனுபவிக்கப் போகிறீர்கள்? என்று யோசித்துப் பாருங்கள் பணம் ஒருபுறம் கோடிக்கணக்கில் சேர்ந்துகொண்டே இருக்கிறது. வயதும் ஒருபுறம் கூடிக்கொண்டே இருக்கிறது. அம்பது அறுபது வயதாகிய பிறகு, சாப்பிட முடிய வில்லை, நடக்க முடியவில்லை, நின்றால் உட்கார முடியவில்லை, உட்கார்ந்தால் காலைத் தொங்கவிட முடியவில்லை.
நினைத்த இடத்திற்குப் போக முடியவில்லை. படுத்தால் தூக்கம் வருவதில்லை, ஆரோக்கியம் இல்லை, உடலும் மனமும் ஒரு நிலையில் இல்லை. மனைவி மக்களோடு இருப்பதற்கு வழியில்லை. மகன் என் மீது அன்பாக இல்லை, என் பேரனுடன் என்னால் நேரம் செலவிட முடியவில்லை. நிம்மதி இல்லை, வாழ்க்கை நரகமாக மாறிவிட்டது.
நாஞ்சில் நாட்டுப் பகுதிகளில் ‘நாய் பெற்ற தெங்கம்பழம்’ என்றொரு சொலவடை உண்டு. பொருள் புரிகிறதுதானே? நாயிடம் இளநீர் கிடைத்தால் என்ன நடக்கும்? போட்டு உருட்டிக்கொண்டும், பல்லினால் கறமிக்கொண்டும் கிடக்கும். அப்படித்தான் இங்கு பலரும் செல்வத்தைப் போட்டு உருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்காக இத்தனை காலம் ஓடி ஓடி சம்பாதித்தேன் என்றே இப்போது எனக்குப் புரியவில்லை என்று சொல்லும் ஒரு மனிதனையாவது தினமும் சந்திக்கிறேன்.
முருகேசன் அண்ணாச்சி திருமணமான நாளிலிருந்து எப்போதும் தன்னுடைய மளிகைக் கடையிலேயே இருப்பார். இரவு பகல் பாராது வேலை செய்து கொண்டே இருப்பார். அஞ்சு பைசா, பத்து பைசாவைக்கூட விடமாட்டார். கறாராகக் கேட்டு வாங்கிக் கொள்வார். கடைப்பையன் தெரியாமல் கல்லா பக்கம் சென்றாலும் கடித்துக் குதறிவிடுவார். இப்படியே நான்கு கடைகள் திறக்கும் அளவிற்குத் தொழிலையும் வளர்த்துவிட்டார்.
இரவு வெகுநேரம் கழித்தே வீட்டுக்குச் செல்வார். சமயங்களில் கடையிலேயே படுத்துக்கொள்வார். இந்தச் சமயத்தில்தான் கொரோனா வந்து நாடு முழுவதும் ஊரடங்கு வந்தது. வேறு வழியில்லாமல் அன்று மதியமே கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். வீட்டு வாசலில் தன் மகளோடு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.
வியப்புடன் அவர்களைப் பார்த்துக்கொண்டே உள்ளே சென்ற அண்ணாச்சி மனைவியிடம், “யாரும்மா அந்தப் பொடியன்” என்று கேட்டார். மனைவி கடும் கோபத்தில் கையில் இருந்த தேங்காயை அண்ணாச்சி மேல் வீசி எறிந்துவிட்டு, பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார். அண்ணாச்சி வெலவெலத்துப் போய்விட்டார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
மறுநாள் மாமியார் வீட்டிற்குச் சென்றபோதுதான் முருகேசனுக்கு சங்கதி புரிந்தது. விளையாடிக்கொண்டிருந்தது அண்ணாச்சியின் இரண்டாவது மகன்.
உங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் நிதானித்து கூர்ந்து கவனித்துப் பாருங்கள். உங்களுக்கே புரிந்துவிடும். என்ன நடந்திருக்கிறது என்று. இருபத்துநான்கு மணி நேரமும் சொத்து சேர்ப்பதற்காக ஓடிக்கொண்டே இருந்தீர்கள். ஆனால், எதற்காக, யாருக்காக இதைச் செய்கிறோம் என்ற உண்மையை மட்டும் மறந்துவிட்டீர்கள்.
நீங்கள் செய்யவேண்டியது என்ன என்பதையே அறியாமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து அதன் பின்னால் மூச்சிரைக்க ஓடிவிட்டீர்கள்.
உண்மையில், நீங்கள் சம்பாதிக்க வேண்டியது பணத்தை அல்ல. நேரத்தை, அனைவரிடமும் நான் எப்போதும் சொல்வது ஒன்றுதான். “You need to buy time” நேரத்தைதான் ஒரு மனிதன் சம்பாதிக்க வேண்டும்.
இன்று ஒரு பத்தாயிரம் ரூபாய் போய்விட்டால் நாளை சம்பாதித்துவிடலாம். ஆனால் நேரம் போய்விட்டது என்றால் திரும்பி வராது. அதனால், நேரத்தைதான் ஒருவர் சம்பாதிக்க வேண்டும்.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதியுங்கள். தினமும் பத்து மணிநேரம் உழைக்கிறீர்கள். மாதம் பதினைந்து லட்சம் வருமானம் வரக்கூடிய அருமையான ஒரு தொழிலைக் கண்டுபிடித்து அதை வெற்றிகரமாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள். அடுத்து ஒரு கடை போடலாமா என்று யோசிக்கும் முன்பு அதற்குச் செலவாகும் நேரத்தைப் பற்றி முதலில் யோசியுங்கள்.
ஏனென்றால், அடுத்து ஒரு கடை போடும்போது அது கூடுதலாக ஒரு பத்து மணிநேரத்தை எடுத்துக்கொண்டுதான் உங்களுக்கு இன்னொரு பதினைந்து லட்சம் வருமானத்தைத் தரும். பதினைந்தும் பதினைந்தும் முப்பது லட்சம் வருமானம் வருகிறது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த முப்பது லட்சத்தை எப்படி அனுபவிக்கப் போகின்றீர்கள் சார்? அதற்கான நேரம் உங்களிடம் இருக்கிறதா? பணம் சம்பாதிப்பதிலேயே நேரத்தை முழுவதும் செலவு செய்துவிட்டீர்களே நீங்கள் தொட்டுக் குளிப்பாட்டி வளர்த்திருக்க வேண்டிய பையன் இப்போது காலேஜ் போகிறான். இப்போது குளிப்பாட்ட முடியுமா?
மாலைத் தென்றலின் சுகந்தத்தை அனுபவித்தபடியே காதல் மொழி பேசி கொஞ் சியிருக்கவேண்டிய காதல் மனையாட்டிக்கு இப்போது கால்வலி வந்துவிட்டதே? மாலை நடையை மனதிற்குள்ளா கூட்டிப்போவீர்கள்? சொக்காரனின் கல்யாணத்தில் முன்வரிசையில் நின்று வருபவர்களை வரவேற்று பட்டு வேட்டியை மடித்துக் கட்டி சாம்பார் வாளியை கையிலேந்தி பந்தி விளம்பியிருக்க, அவரை இன்னொரு கல்யாணமா செய்துகொள்ளச் சொல்வீர்கள்?
அப்படியென்றால் என்னதான் செய்வது?
சொல்கிறேன். புத்திசாலி செய்யவேண்டியது என்ன வென்றால் பத்து மணிநேரம் செலவு செய்து பதினைந்து லட்சம் சம்பாதிக்கும் திறனை வைத்து. அதே பதினைந்து லட்சத்தை ஐந்து மணிநேரத்தில் எப்படிச் சம்பாதிப்பது என்று யோசிக்க வேண்டும். சாத்தியமாகிவிட்டது என்றால் அது ஒரு மிகப் பெரிய சாதனை.
இப்படி, பத்து மணிநேரத்தில் சம்பாதிக்கும் பணத்தை ஐந்து மணிநேரத்தில் சம்பாதித்துவிட்டீர்கள் என்றால் மீதம் இருக்கும் ஐந்து மணிநேரத்தை உங்களுக்காகச் செலவு செய்யலாம் அல்லவா? குடும்பத்துடன் நேரம் செலவிடலாம். உடம்பைக் கவனித்துக்கொள்ளலாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளலாம். படிக்கலாம், எழுதலாம்,பாட்டு கேட்கலாம்,பயணம் போகலாம், உங்களுக்கு விருப்பமானதைச் செய்யலாம்.
அடுத்த முறை ஐந்து மணிநேரத்தில் சம்பாதித்த பணத்தை ஒரு மணிநேரத்தில் சம்பாதிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்போது ஒன்பது மணிநேரம் உங்கள் கையில் இருக்கும். இந்த ஒன்பது மணிநேரத்தில் உங்கள் வாழ்கையை தரமான வழிகளில், உயர்வான ரசனைகளில் எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மிகப் பெரிய சக்திவாய்ந்த நிலைக்கு வந்துவிடுவீர்கள். இது தான் மிகப் பெரிய சொத்து.
அதாவது, செல்வமும் இருக்கவேண்டும். அந்தச் செல்வத்தை அனுபவிக்கக்கூடிய நேரமும் இருக்கவேண்டும். நல்ல ஆரோக்கியமும் அமைதியும் வேண்டும். நினைப்பதைச் செய்யமுடியவேண்டும். அப்போதுதான் சம்பாதித்த பணத்தை அனுபவிக்க முடியும்.
அனைவரும் என்மீது அன்பாக இருக்கவேண்டும். இந்த உலகமே என்னை நேசிக்க வேண்டும் என்று விரும்பினால். இந்த உலகத்திற்காக நீங்கள் ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். நண்பர்கள், மனைவி, குழந்தை,தாய்,தந்தை, குடும்பம் மற்றும் சமுதாயத்திற்குக் கட்டாயம் ஏதாவது செய்யவேண்டும். அதற்கெல்லாம் நேரம் தேவை. அதனால், நேரத்தைச் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் அன்பைச் சம்பாதிக்க முடியும்.
பதினைந்து லட்சம் வருமானம் இருக்கிறது. அதை அனுபவிப்பதற்கு உண்டான நேரம் இருக்கிறது. அன்பைச் சம்பாதிக்க அந்த நேரத்தைச் செலவிட முடிகிறது. நினைத்ததை எல்லாம் செய்வதற்கும் நேரம் கிடைக்கிறது என்றால் நீங்கள்தான் ராஜா. ராஜா என்றா சொன்னேன், மகாராஜா. இல்லை, இல்லை. அப்படி வாழ்பவன் பெயர் சக்கரவர்த்தி.
இப்படிப்பட்ட வாழ்க்கைதான் மிகப் பெரிய சொத்து. இதைச் செய்வதில் என்ன சிக்கல்? உங்கள் உயிர் மூலமும் செய்யும் வேலையும் ஒத்திசையாமல் இருப்பது தான் சிக்கல் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதல்லவா? விளக்குகிறேன்.
வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த நாள் எது என்று கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்? எனக்கு ஞாயிற்றுகிழமை தான் மிகவும் பிடிக்கும். நீங்கள் மட்டுமில்லை, நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது பேர் யோசிக்காமல் பட்டென்று சொல்லும் பதிலும் இதுதான்.
ஏன்? ஏனென்றால் ஞாயிற்றுகிழமைதானே விடுமுறை உண்மையில் அது விடுமுறை என்பதால் அல்ல ஞாயிற்றுகிழமையைதான் உங்களுக்காக நீங்கள் செலவிடுகிறீர்கள், மற்ற நாட்களில் உங்களுக்காக நீங்கள் நேரம் செலவு செய்வது இல்லை பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். நரகத்தில் இருக்கிறீர்கள்.
ஞாயிற்றுகிழமை மட்டும்தான் உங்களுக்காக செலவளக்கிறீர்கள். அன்று என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். பிள்ளைகளுடன் விளையாடலாம். உங்கள் அறையைச் சுத்தம் செய்யலாம். சமையல் செய்யலாம். மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றலாம். குடும்பத்தோடு மைதானத்திற்குச் செல்லலாம். இவைகளும் ஒருவகையில் வேலைதான். ஆனால், இவை உங்களுக்குப் பிடித்த வேலைகள் எப்போது செய்யலாம் என்று நீங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் வேலைகள்.
ஆக மொத்தத்தில் தொண்ணுற்று ஒன்பது பேருக்குப் பிடித்தது இந்த ஞாயிற்றுக்கிழமைதான். அந்த ஒருநாள் ஒய்விற்காக மீதம் இருக்கும் ஆறு நாட்கள் படாதபாடு படுகிறார்கள். அப்படியென்றால் உண்மையில் எது சந்தோசத்தைத் தருகிறது. நினைத்ததை, பிடித்ததை செய்யகூடிய நேரம். அது என்றைக்குக் கிடைக்கிறதோ அன்றுதான் நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கள்.
நினைத்துப் பாருங்கள். ஏழு நாட்களில் ஆறு ஞாயிற்றுக் கிழமை இருந்தால் எப்படி இருக்கும்? மிகவும் நன்றாக இருக்கும் இல்லையா? எப்படித் தொழிலைப் பெருக்குவது என்று மட்டுமே சிந்திக்காமல் நேரத்தை எப்படிச் சம்பாதிக்க முடியும் என்று யோசியுங்கள். ஏழு நாட்களும் ஞாயிற்றுக்கிழமையாகும்.
அப்படி ஏழு நாட்களும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, வாழ்க்கையே விடுமுறை நாட்களாகிவிட்டதென்றால் அதைவிட ஆனந்தம் என்ன இருக்கிறது? அந்த ஆனந்தத்தில் பிறப்பதுதானே மகா சக்தி. ‘கண்முன் நிற்கும் காரியமே சக்தி’ என்று பாரதி சொல்வது இதைத்தானே.
எப்போது உங்களுக்குள் இருக்கும் உயிர் மூலமும் நீங்கள் செய்யும் வேலையும் ஒத்திசைகிறதோ அப்போது எல்லா நாளும் ஓய்வு நாள்தான். எப்போதுமே ஆனந் தம்தான்.
பணத்தை மட்டும் சம்பாதித்து வாழ்கையைத் தொலைத்தவர்கள் பட்டியலில் நீங்களும் சேர்ந்துவிடாதீர்கள். நேரத்தைச் சம்பாதியுங்கள். பயனுள்ள காரியங்களில் சேமித்த நேரத்தைச் செலவிடுங்கள்.



