தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை உடைக்க நடைபெற்று வரும் முயற்சிகள் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ராகுல்காந்தி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக ஊடகவியலாளர் சத்தியராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :- இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலில் ராகுல்காந்தி குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து ராகுல்காந்தியின் தரவுகள் பிரிவு தலைவர் வருண் சக்ரவர்த்தி ஏன் குற்றம்சாட்டினார். இதன் பின்னணியில் யார் யார்? உள்ளனர் என்பதை அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் விஜயை சென்று சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி, அதன் பிறகு ஒரு கட்டுரை எழுதினார். அதில் தமிழ்நாட்டின் கடன் அச்சமூட்டுவதாக உள்ளதாகவும், அதிகளவு கடன் வாங்கியதால் தமிழ்நாடு ஒன்றுமில்லாமல் முடிந்து போக போகிறது என்றும் வருண் சக்ரவர்த்தி தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசு திவாலாக போகிறது என்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் அந்த கட்டுரையை எழுதுகிறார். இந்த கட்டுரை திமுக குறித்த காங்கிரசின் நிலைப்பாடா? என்று கேள்வி எழும்பியது. தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வருகிறது. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையும் அவர்கள் இணைந்து சந்திக்க உள்ளனர். இந்நிலையில், இந்த கூட்டணியை எப்படியாவது உடைக்கும் வேலையில் வருண் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் இணைந்து இப்படியான முரண்பாடுகளை உருவாக்குகிறார்கள்.

அத்துடன் டெல்லியில் இருக்கும் முக்கியமான காங்கிரஸ் தலைவரான கே.சி.வேணுகோபால் இவர்களுக்கு எல்லாம் தலைவராக இருந்து கொண்டுள்ளார். ராகுல்காந்தியிடம் தவறான தகவல்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் விஜய் தான் வெற்றி பெற போகிறார். வெற்றிபெறும் கூட்டணியில் இடம்பெற்றால் 50 எம்எல்ஏக்கள் வரை பெற முடியும். பல வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் தமிழ்நாட்டில் காலூன்ற முடியும். அதற்கு ஒரே கருவி விஜய் தான் என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.
ராகுல்காந்தி 2026 சட்டமன்றத் தேர்தல் முக்கியமல்ல. 2029 நாடாளுமன்றத் தேர்தல் தான் முக்கியம் என்கிற நிலைப்பாட்டில் உள்ளார். மத்தியில் பாஜக அரசை வீழ்த்தி, ஆட்சிக்கு வருவதில் ராகுல்காந்தி ஆர்வமாக உள்ளார். ஆனால், அவருடன் இருக்கும் கே.சி.வேணுகோபால், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களுக்கு தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அரசியல் ஆசைகளை எப்படியாவது அடைந்துவிடுவதற்காக ராகுல்காந்தியை தவறாக வழிநடத்துகிறார்களா? என்கிற கேள்வி இந்த கட்டுரை வாயிலாக எழுந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த கே.சி.வேணுகோபால், கேரளாவில் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு கேரளாவில் விஜய் பிரச்சாரம் செய்தால் நாம் ஆட்சிக்கு வர முடியும் என்று ராகுல்காந்தியிடம் கேன்வாஸ் செய்கிறார். மேலும் தமிழ்நாட்டிலும் விஜய்தான் ஆட்சிக்கு வருவார். அவரிடம் உள்ள ரசிகர்கள் பலம் மூலம் தென்னிந்தியா முழுமையாக காங்கிரசை பலப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர். இதில் பிரவீன் சக்ரவர்த்தி, தமிழ்நாடு அரசு, உத்தர பிரதேசத்தை விட அதிக கடன் வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உலக அளவில் அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது.
கிட்டத்தட்ட இந்தியாவின் கடன் 300 லட்சம் கோடி ரூபாய் ஆகும். தமிழ்நாட்டின் கடன் 9 லட்சம் கோடி ரூபாய். அப்போது இந்தியா, தமிழ்நாடு இரண்டும் ஆபத்தான நிலையில் உள்ளதா? கொஞ்சம் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ள நிலையில், ஒற்றை இலக்க வளர்ச்சி கொண்ட உ.பி. உடன் ஒப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை விட உத்தரபிரதேசம் நல்ல மாநிலம் என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது.

2025 – 2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் மொத்த வரவு 3.32 லட்சம் கோடி. மொத்த செலவு 4.39 லட்சம் கோடி. சுமார் ஒரு லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது ஆபத்தானது அல்ல. காரணம் பொருளாதார வளர்ச்சி மிகுந்த நாடுகளில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பார்கள். நலத்திட்டங்களுக்கு அதிளவில் நிதியை செலவிடுவார்கள். அப்போது தான் நிறைய பேர் படிக்க முடியும், நிறைய பேர் ஆரோக்கியமாக இருக்க முடியும். பெண்கள் அதிகளவில் வேலைக்கு செல்வார்கள். இப்படி செல்வதால் அரசுக்கு வரியாக அதிகளவு நிதி வரும்.. அதன் மூலமாக கடன்களை அடைப்பார்கள்.
15வது திட்ட ஆணையம் ஒரு மாநிலத்தின் ஜிடிபியில் 3.5 சதவீதத்தை தாண்டி கடன் வாங்கக்கூடாது என்று சொல்லியுள்ளது. தமிழ்நாடு வாங்கியுள்ள ஒரு லட்சம் கோடி என்பது, மாநில ஜிடிபியில் 3 சதவீதம் தான். எனவே தமிழ்நாடு வரம்புக்குள்ளாகவே கடன் வாங்கியுள்ளது. குறிப்பாக 2020 முதல் தமிழ்நாடு அரசு நிதிப் பற்றாக்குறையை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு 4.9 சதவீதமாக இருந்தது. அதை படிப்படியாக குறைத்து 2025ல் மூன்று சதவீதமாக கொண்டுவந்துவிட்டனர்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் 9 லட்சம் கோடியாக உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் திட்டக்குழு அளித்துள்ள வரையறையில் மாநிலத்தின் ஒட்டுமொத்த ஜிடிபியில் மொத்த கடன் 28.7 சதவீதத்தை தாண்டக்கூடாது. அதன்படி பார்த்தோம் என்றால் தமிழ்நாட்டின் மொத்த கடன் 26.7 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கடன் சுமையில் தமிழ்நாடு 18வது இடத்தில் உள்ளது. நம்மை விட மோசமான மாநிலங்கள் 17 உள்ளன. அதில் பிரவீன் சக்ரவர்த்தி சொன்ன உத்தர பிரதேசமும் உள்ளது. அவர்களின் மொத்தக்கடன் ஜிடிபியில் 31.8 சதவீதம் ஆகும். அவர்கள் கடன் சுமையில் 14வது இடத்தில் உள்ளனர். தமிழ்நாடு அரசு கடன் சுமையை 24 சதவீதமாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனவே தமிழ்நாடு கடன் சுமையை படிப்படியாக குறைத்துக்கொண்டு வருகிறது. இந்த சூழலில் நாட்டில் கடன்சுமையால் பாதிக்கப்பட்ட 17 மாநிலங்கள் பற்றி பேசமால், திமுகவை குறிவைத்து பிரவீன் சக்ரவர்த்தி பேச காரணம் எப்படியாவது கூட்டணியை உடைத்து காங்கிரசுடன் போய் சேர்வதாகும். ஒரு எம்.பி.
சீட்டிற்காகவும், கேரளாவில் முதல்வர் ஆக வேண்டும் என்கிற அற்ப நோக்கத்திற்காக இதை அவர்கள் செய்கிறார்கள். ராகுல்காந்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


