நடிகை விஜயலட்சுமி பாலியல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சீமான் மன்னிப்பு கடிதம் வழங்கினால் அவருடைய அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று ஊடகவியலாளர் அதர்மம் மனோஜ் தெரிவித்துள்ளார்.


நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து, த.பெ.தி.க. வடக்கு மண்டல செயலாளரும், ஊடகவியலாளருமான அதர்மம் மனோஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நடிகை பாலியல் வழக்கில் வரும் 24ஆம் தேதிக்குள் சீமான் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குறித்து சீமானின் பார்வை என்ன என்றுதான் நாம் பார்க்க வேண்டும். விஜயலட்சுமி இத்தனை ஆண்டுகளாக வைத்த குற்றச்சாட்டுகளை எல்லாம் ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கடிதம் எழுதி தரப் போகிறாரா? அல்லது விஜயலட்சுமி தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போகிறாரா? என்றுதான் பார்க்க வேண்டும்.
கடந்த 13 வருடங்களில் பெரும்பாலான நேரங்களில் நடிகை விஜயலட்சுமி யார் என்றே தெரியாது என்று சீமான் சொன்ன வரலாறுகள் உள்ளது. பின்னர் விஜயலட்சுமி தன்னுடைய அக்கா பிரச்சினை தொடர்பாக தன்னை அணுகினார். அதை தாண்டி எதுவும் தெரியாது என்று சொன்னார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2 வருடங்களாக தான் பரஸ்பர சம்மதத்துடன் விஜயலட்சுமியுடன் பழகியதாக சொல்லி வருகிறார். ஒருவேளை இந்த வழக்கில் சீமான் மன்னிப்பு கடிதம் வழங்கும்பட்சத்தில் கடந்த 12 ஆண்டுகளாக சீமான் பேசியது எல்லாம் பொய் என்று, அவரே ஒப்புக்கொள்வதாக தான் அர்த்தம்.

ஒரு நேர்மையான அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழும்பட்சத்தில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபித்துவிட்டு தான் பதவிக்கு வருவேன் என்று பதவி விலகுவார்கள். ஆ.ராசா போன்ற பலர் அப்படி தான் செய்தார்கள். அப்போது, சீமான் உண்மையாகவே நடிகையிடம் பாலியல் சுரண்டல் செய்யவில்லை. 7 முறை கருக்கலைப்பு செய்யவில்லை என்றால்? மன்னிப்பு கேட்க முடியாது. நான் வழக்கை நடத்தி என்னை நிரபராதி என்று நிரூபித்துக்கொள்கிறேன் என்று தான் கோபம் வர வேண்டும். அப்படியான கோபம் சீமானுக்கு வருகிறதா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு முதல் முறை விசாரணைக்கு வந்தபோது விஜயலட்சுமி தரப்பிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சீமான் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. விஜயலட்சுமி தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாட மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த வாதத்தை வைத்தனர். ஆனால், அடுத்த வாய்தாவின் போதே விஜயலட்சுமி தரப்பில் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தாங்கள் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை என்றும் சொல்லிவிட்டனர். அப்போதுதான் சீமான் தரப்பில் சொல்லப்பட்டது பொய் என்று நீதிமன்றத்திற்கு தெரியவந்தது.

விஜயலட்சுமி தரப்பில் ஜதின் பரத்வாஜ் என்ற வழக்கறிஞர் ஆஜராகிறார். நேற்று முன்தினம் அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதன் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார். அப்போது உச்சநீதிமன்றத்தில் சமரசம் பேசுவதாக பொய் சொல்லிவிட்டு, அன்றைய தினமே பத்திரிகையாளர்களிடம் தான் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லை என்று மாற்றி பேசினார். சீமானுடைய நேர்மைத் தன்மைக்கு இதுதான் சான்று என உச்சநீதிமன்றத்தில் அம்பலப்படுத்திவிட்டார். பாலியல் வழக்கில் சீமான் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது என்ற புள்ளிக்கு நகர்கிறார்கள் என்றால்? பாலியல் வழக்கில் மன்னிப்புகடிதம் வழங்கி ஒருவர் விடுதலையானது கிடையாது. அப்படி செய்வது சீமானுடைய ஒட்டுமொத்த அரசியலையும் அஸ்தமனமாக்கிவிடும்.

டிஐஜி வருண்குமார் விவகாரத்தில், மன்னிப்பு கோரி நோட்டீஸ் அனுப்பிய சீமான், பின்னர் தனக்கு தெரியாமல் அந்த நோட்டீஸ் அனுப்பியதாக பின்வாங்கினார். காரணம் வருண்குமார் அதை பொதுவெளியில் வெளியிட்டதுதான். நடிகை பாலியல் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் என்றால், அவருடைய அரசியல் வாழ்க்கை பலத்த சேதம் அடையும். எனவே அவர் அந்த புள்ளிக்கு செல்வாரா? அல்லது இந்த வழக்கை எதிர்கொள்ள தயார் என்று சொல்வாரா? தன் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி தான் சீமான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது, மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்தால் அந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக தானே அர்த்தமாகும்.
நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகினார். பாலியல் வழக்கில் சீமான் மன்னிப்பு கடிதம் மட்டும் எழுதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியுள்ளது யாருக்கும் திருப்தி இல்லை. அடுத்த 12 நாட்களில் இது எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இவர் மன்னிப்புக்கடிதம் எழுதினாலே தவெகவினர் கிழித்து தொங்கவிடுவார்கள். இது காலத்திற்கும் அசிங்கம்தான்.

இந்த வழக்கில் விஜயலட்சுமி தவறு செய்திருந்தால் அவரையும் மன்னிப்பு கேட்க சொல்லியிருப்பார்கள் அல்லவா? இந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி உறுதியாக உள்ளார். அதனால்தான் வழக்கில் இத்தனை வாய்தாக்கள் போயிருக்கிறது. முன்பு சீமானின் மிரட்டலுக்கு பயந்தோ, அவருடைய பொய்யான வாக்குறுதிகள் காரணமாகவோ மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆனால் தற்போது சீமான் யார் என்று அவர் முழுமையாக உணர்ந்துவிட்டார். இனி அவர் பின்வாங்க வாய்ப்பில்லை. ஆனால் தான் பாலியல் குற்றவாளி என்று ஒப்புக்கொள்வாரா? அல்லது வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிப்பாரா என்பது சீமான் கைகளில்தான் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


